அரசியலுக்கு அப்பாற்பட்டவர் காந்தி

மகாத்மா காந்தி, அரசியலுக்கும் அதிகாரத்துக்கும் அப்பாற்பட்டவர்; கோட்சே, மகாத்மா காந்தியை கொன்றார். ஆனால் பாஜக வேட்பாளர் சாத்வி
அரசியலுக்கு அப்பாற்பட்டவர் காந்தி


புது தில்லி: "மகாத்மா காந்தி, அரசியலுக்கும் அதிகாரத்துக்கும் அப்பாற்பட்டவர்; கோட்சே, மகாத்மா காந்தியை கொன்றார். ஆனால் பாஜக வேட்பாளர் சாத்வி பிரக்யா சிங் தாக்குர் போன்றவர்கள் நாட்டின் இறையாண்மையை கொல்கின்றனர்' என்று அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி தெரிவித்துள்ளார்.

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரும், மத்தியப் பிரதேச மாநிலம், போபால் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளருமான பிரக்யா சிங் தாக்குர், மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவை "தேச பக்தர்' என்று அண்மையில் தேர்தல் பிரசாரத்தின்போது குறிப்பிட்டிருந்தார்.

அவரின் இந்த கருத்து பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில், பிரக்யாவின் இந்த கருத்துக்காக அவரை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

அதையடுத்து தனது கருத்துக்காக மன்னிப்பு கோரிய பிரக்யா, "நாட்டுக்காக மகாத்மா காந்தி செய்த தியாகத்தையும், அளித்த பங்களிப்பையும்  யாராலும் மறக்க முடியாது. காந்திக்கு என்றும் நான் மரியாதை அளிப்பேன்' என்றார்.

இந்நிலையில், பிரக்யா தெரிவித்த கருத்து குறித்து,  கைலாஷ் சத்யார்த்தி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில்,"மகாத்மா காந்தியை கோட்சே சுட்டுக் கொன்றார். 

ஆனால் பிரக்யா போன்றவர்கள் நாட்டின் அமைதி, சகிப்புத்தன்மை, இறையாண்மை ஆகியவற்றை கொல்கின்றனர். மகாத்மா காந்தி, அரசியலுக்கும், அதிகாரத்துக்கும் அப்பாற்பட்டவர்.

பிரக்யாவால் கட்சிக்கு பலன் உண்டு என்று நினைக்காமல், ராஜ தர்மத்தின் அடிப்படையில், அவரை உடனடியாக  கட்சியில் இருந்து பாஜக நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com