நேர்மையானவர்களை எம்.பி.க்களாக தேர்வு செய்யுங்கள்: இந்தியாவின் முதல் வாக்காளர்

நேர்மையானவர்களையும், துடிப்புடன் செயல்படக் கூடியவர்களையும் மக்களவைக்கு எம்.பி.க்களாக தேர்வு செய்ய வேண்டும் என்று
நேர்மையானவர்களை எம்.பி.க்களாக தேர்வு செய்யுங்கள்: இந்தியாவின் முதல் வாக்காளர்


கின்னௌர்: நேர்மையானவர்களையும், துடிப்புடன் செயல்படக் கூடியவர்களையும் மக்களவைக்கு எம்.பி.க்களாக தேர்வு செய்ய வேண்டும் என்று வாக்காளர்களுக்கு இந்தியாவின் முதல் வாக்காளரான சியாம் சரண் நெகி வேண்டுகோள் விடுத்தார்.

ஹிமாசலப் பிரதேச மாநிலம், கின்னௌரைச் சேர்ந்த நெகி, கடந்த 1917ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1ஆம் தேதி பிறந்தார். அவருக்கு தற்போது 102 வயது ஆகிறது. சுதந்திர இந்தியாவில் கடந்த 1952ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் தேர்தலில் முதல் வாக்கைப் பதிவு செய்தவர் இவர்தான். அதாவது, நாடு முழுவதும் கடந்த 1952ஆம் ஆண்டு முதல் தேர்தல் நடைபெற்றது. அப்போது ஹிமாசலப் பிரதேசத்தில் இருக்கும் மலைப்பகுதிகளில் மட்டும் 5 மாதங்களுக்கு முன்னரே தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது ஆசிரியராக பணியாற்றிய நெகி, வாக்குச்சாவடி பணியிலும் நியமிக்கப்பட்டிருந்தார். இதனால் அந்த வாக்குச்சாவடிக்கு சென்று காலை 7 மணிக்கே தனது வாக்கை பதிவு செய்தார். அவருக்கு முன்பு யாரும் அங்கு வாக்குப்பதிவு செய்திருக்கவில்லை. இதனால் அவரே, நாட்டின் முதல் வாக்காளராக கருதப்படுகிறார்.

இந்நிலையில், கின்னௌரில் பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:

தேர்தலில் குறிப்பிட்ட அரசியல் கட்சிகளுக்கு வாக்களிப்பதை விடுத்து, நேர்மையானவர்களையும், துடிப்புடன் செயல்படக் கூடிய நபர்களையும் எம்.பி.க்களாக தேர்வு செய்ய வேண்டும். மக்களவை இறுதிக்கட்ட தேர்தலில் மீண்டும் வாக்களிக்க விரும்புகிறேன் என்றார் நெகி.

தற்போது வயோதிகம் காரணமாக எழுந்து நிற்கவோ, நடக்கவோ முடியாத நிலையில் நெகி உள்ளார். அவரின் கண் பார்வை திறனும் பாதிக்கப்பட்டுள்ளது. நெகியுடன் சேர்த்து, ஹிமாசலப் பிரதேசத்தில் 100 அல்லது அதற்கு அதிக வயதை கொண்ட வாக்காளர்கள் 999  பேர் உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com