மகாராஷ்டிரத்தில் 26 அணைகள் வறண்டன..!

மகாராஷ்டிரத்தில் 26 அணைகள் நீரின்றி முழுவதும் வறண்டு விட்டதாக அந்த மாநில நீர் பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.


மும்பை: மகாராஷ்டிரத்தில் 26 அணைகள் நீரின்றி முழுவதும் வறண்டு விட்டதாக அந்த மாநில நீர் பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

ஒவ்வோர் ஆண்டும், கோடைக்காலத்தில் மகாராஷ்டிரத்தில் வறட்சி மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. கடந்த ஆண்டு 151 தாலுக்காக்கள் மற்றும் 260 நகரங்கள் வறட்சிப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. இந்த ஆண்டு அதைவிட மோசமாக, மே மாதத்திலேயே 26 அணைகளில் நீர்மட்டம் பூஜ்யத்தை எட்டியுள்ளது. 

அணைகளின் நீர்மட்டம் குறித்து அந்த மாநில நீர் பாதுகாப்பு துறை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 

ஒளரங்காபாத் மண்டலத்தில் உள்ள பர்பானி, ஆஸ்மானாபாத் உள்ளிட்ட மாவட்டங்களில்  8 அணைகள் உள்ளன. அந்த 8 அணைகளிலும் நீர்மட்டம் பூஜ்யத்தில் உள்ளது. ஒளரங்காபாத் மண்டலத்தில்  வெறும் 0. 43 சதவீதமே நீர் உள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்தில் இந்த மண்டலத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் 23 சதவீதமாக இருந்தது. அதை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு மிக மோசமான வறட்சி நிலையில் அணைகள் உள்ளன.

நாசிக், நாக்பூர் மண்டலத்தில் உள்ள அணைகளும் முற்றிலுமாக வறண்டு விட்டன. மாநிலத்தில் பெரிய, நடுத்தர மற்றும் சிறிய அளவில் மொத்தம் 103 அணைகள் உள்ளன. அவை அனைத்திலும் 11.84 சதவீதமே நீர் உள்ளது. கடந்த ஆண்டு சுமார் 24 சதவீதம் நீர் இருந்தது. இந்த ஆண்டு அதில் பாதியளவு கூட  நீர் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

வறட்சியை கையாள்வதில் அரசு தோல்வி..: இந்நிலையில், வறட்சி ஏற்பட்ட பகுதிகளில் கால்நடைகளுக்காக  அமைக்கப்பட்டுள்ள தீவண முகாம்கள் முறையாக செயல்படுத்தப்படுவதில்லை என்று சமூக ஆர்வலர் லக்கி பாட்டீல் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், வறட்சி ஏற்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கால்நடை பாதுகாப்பு மற்றும் தீவண முகாம்களில் அரசியல் தலைவர்களின் கால்நடைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகின்றன. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீர் முழுவதும் வற்றி விட்டது. 

மக்களுக்கு அரசு வழங்கும் குடிநீரும் சுத்தரிகரிக்கப்படாத நீராக உள்ளது. மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. இந்த பிரச்னையை கையாள்வதில் அரசு தோற்றுவிட்டது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com