மக்களவை இறுதிக்கட்ட தேர்தல்: மேற்கு வங்கம், பஞ்சாபில் வன்முறை: 64% வாக்குப்பதிவு

மக்களவைக்கு இறுதிக்கட்டமாக 59 தொகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 64  சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
மக்களவை இறுதிக்கட்ட தேர்தல்: மேற்கு வங்கம், பஞ்சாபில் வன்முறை: 64% வாக்குப்பதிவு

மக்களவைக்கு இறுதிக்கட்டமாக 59 தொகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 64  சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தேர்தலின்போது மேற்கு வங்கம், பஞ்சாப் மாநிலங்களின் பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன.

மக்களவையில் உள்ள 542 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் 7-ஆவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல், உத்தரப் பிரதேசம் (13), மேற்கு வங்கம் (9), பஞ்சாப் (13), பிகார் (8), மத்தியப் பிரதேசம் (8), ஹிமாசலப் பிரதேசம் (4), ஜார்க்கண்ட் (3), சண்டீகர் (1) ஆகிய 8 மாநிலங்கள், யூனியன் பிரதேசத்தில் உள்ள 59 தொகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் போட்டியிட்ட வாராணசி மக்களவைத் தொகுதியும் அடங்கும்.

உத்தரப் பிரதேச மாநில பாஜக தலைவர் மகேந்திரநாத் பாண்டே போட்டியிட்ட சந்தௌலி மக்களவைத் தொகுதியில் பாஜக, சமாஜவாதி தொண்டர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதுகுறித்த தகவலின்பேரில் பாதுகாப்புப் படையினர் விரைந்து வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். சந்தௌலி தொகுதியிலுள்ள தாரா ஜிவன்பூர் கிராமத்தில் தலித்துகளின் கைவிரல்களில், தேர்தலில் அவர்கள் வாக்களிப்பதற்கு முன்பே, அடையாள மை வைக்கப்பட்டதாக  குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பாஜக வேட்பாளர்களின் கார்கள் மீது தாக்குதல்: மேற்கு வங்கத்தில் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. குறிப்பாக, தலைநகர் கொல்கத்தா, அதன் புறநகர் பகுதிகளில் மோதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. வாக்குச்சாவடிக்கு வெளியே நின்று கொண்டிருந்த தங்களை மத்திய பாதுகாப்புப் படையினர் மிரட்டியதாக திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். டைமண்ட் ஹார்பர் தொகுதி பாஜக வேட்பாளர் நிலஞ்சன் ராய், ஜாதவ்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் அனுபம் ஹஜ்ரா ஆகியோரின் கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன. வடக்கு கொல்கத்தா தொகுதிக்குள்பட்ட கிரிஷ் பூங்கா பகுதியில் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இருப்பினும், பட்டாசுகள் வெடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தெற்கு கொல்கத்தா தொகுதி திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் மாலா ராய், வாக்குச்சாவடிக்குள் செல்வதற்கு தமக்கு அனுமதி தரப்படவில்லை என்று புகார் தெரிவித்துள்ளார். சில வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. இதனால் சில நிமிடங்கள் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. இருப்பினும், அந்த கோளாறு சரி செய்யப்பட்டு வாக்குப்
பதிவு மீண்டும் தொடங்கியது.

பஞ்சாபில் காங்கிரஸார் துப்பாக்கி சூடு: பஞ்சாப் மாநிலம், லூதியானா, மொகா உள்ளிட்ட இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த இயந்திரங்கள் மாற்றப்பட்டு, வாக்குப்பதிவு மீண்டும் நடத்தப்பட்டது. பதின்டா, குருதாஸ்பூர் ஆகிய நகரங்களில் காங்கிரஸ் மற்றும் அகாலிதளம்-பாஜக தொண்டர்கள் இடையே மோதல் மூண்டது. தல்வாண்டி சபோ பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் துப்பாக்கியால் சுட்டதாக அகாலிதளம் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலம், அகர் மால்வா மாவட்டத்திலும், மந்த்சௌர் தொகுதியில் உள்ள 5 சாவடிகளிலும் மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். பிகார் மாநிலம், பாட்னாவில் செய்தியாளர்கள் சிலரை ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாதின் மகன் தேஜ் பிரதாப்பின் பாதுகாவலர்கள் அடித்து உதைத்தனர்.

மக்களவை இறுதிக்கட்ட தேர்தலில் சுமார் 64 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில் 66.40 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. அதனுடன் ஒப்பிடுகையில், இது குறைவாகும்.

23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை: 7 கட்டத் தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் வரும் 23ஆம் தேதி எண்ணப்படுகின்றன. அன்றைய பிற்பகலிலேயே, தேர்தல் முடிவுகள் ஏறத்தாழ தெரிந்து விடும்.

தேர்தல் ஆணையருடன் யெச்சூரி சந்திப்பு

மக்களவைத் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப் பதிவில் மேற்கு வங்கத்தில் வன்முறை நேரிட்டது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவை சந்தித்து பேசினார்.

இதுதொடர்பாக சுட்டுரையில் அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், "டம் டம், டைமண்ட் ஹார்பர், கொல்கத்தா வடக்கு, ஜாதவ்பூர் ஆகிய இடங்களில் கடைசி கட்ட வாக்குப் பதிவின்போது வன்முறை நேரிட்டது. இதுதொடர்பாக சுனில் அரோராவிடம் எடுத்துரைத்தேன்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் 9 மக்களவைத் தொகுதிகளுக்கு கடைசி கட்ட தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com