மணிப்பூரில் பாஜக அரசுக்கான ஆதரவை திரும்ப பெற நாகா மக்கள் முன்னணி முடிவு

மணிப்பூரில் பாஜக தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெற நாகா மக்கள் முன்னணி (என்பிஎஃப்) முடிவு செய்துள்ளது.

மணிப்பூரில் பாஜக தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெற நாகா மக்கள் முன்னணி (என்பிஎஃப்) முடிவு செய்துள்ளது. அதேசமயம், நாகா மக்கள் முன்னணியின் இந்த முடிவால் கூட்டணி அரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று பாஜக தெரிவித்துள்ளது.
60 உறுப்பினர்கள் கொண்ட மணிப்பூர் சட்டப் பேரவைக்கு கடந்த 2017-இல் நடைபெற்ற தேர்தலில், காங்கிரஸ் 29 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும், 21 இடங்களை கைப்பற்றிய பாஜக, நாகா மக்கள் முன்னணி (4), தேசிய மக்கள் கட்சி (4), லோக்ஜன சக்தி (1), திரிணமூல் காங்கிரஸ் (1) ஆகிய கட்சிகள் மற்றும் ஒரு சுயேச்சை எம்எல்ஏ ஆதரவுடன் கூட்டணி ஆட்சியை அமைத்தது.
இதனிடையே, காங்கிரஸிலிருந்து 8 எம்எல்ஏக்கள் விலகி, பாஜகவில் கடந்த ஆண்டு இணைந்தனர். இதனால், பாஜகவின் பலம் 29-ஆக அதிகரித்தது.
இதனிடையே, கூட்டணி அரசு அமைத்தபோது மேற்கொள்ளப்பட்ட சில உடன்பாடுகளை பாஜக மதிக்கவில்லை என்று நாகா மக்கள் முன்னணி குற்றச்சாட்டியது. கூட்டணியில் நீடிப்பதா வேண்டாமா என்பது குறித்து ஆலோசிக்க, நாகா மக்கள் முன்னணியின் மூத்த தலைவர்களின் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அதில், மணிப்பூரில் பாஜக தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெறுவது என்று முடிவெடுக்கப்பட்டது.
இதுதொடர்பாக நாகா மக்கள் முன்னணியின் மணிப்பூர் மாநில தலைவர் அவாங்போ நிமாய் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், "மே 23-ஆம் தேதிக்கு பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்' என்றார்.
இதனிடையே, நாகா மக்கள் முன்னணியின் இந்த முடிவால் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று பாஜக தெரிவித்துள்ளது. "எங்களுக்கு 29 எம்எல்ஏக்கள் உள்ளனர். தேசிய மக்கள் கட்சி, லோக்ஜனசக்தி, திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவு உள்ளதால் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை' என்று பாஜக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com