மீண்டும் பாஜக ஆட்சி: பெரும்பாலான வாக்குக் கணிப்பு முடிவுகள்

நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று பெரும்பாலான வாக்கு கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. 
மீண்டும் பாஜக ஆட்சி: பெரும்பாலான வாக்குக் கணிப்பு முடிவுகள்

நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று பெரும்பாலான வாக்கு கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. 
அந்த கூட்டணி 300-க்கும் அதிகமான தொகுதிகளைக் கைப்பற்றும் என்று சில முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனால், மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
மக்களவைக்கு 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. மொத்தம் 542 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் வேலூர் மக்களவைத் தொகுதியில் பணம் கைப்பற்றப்பட்டதை அடுத்து, அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள், வரும் 23-ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்.
எனினும், ஏழாவது மற்றும் இறுதிக் கட்டத் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்ததும், பல்வேறு அமைப்புகளும், தொலைக்காட்சி நிறுவனங்களும் தேர்தலுக்குப் பிந்தைய வாக்கு கணிப்பு முடிவுகளை வெளியிட்டன. அவற்றில் பெரும்பாலான வாக்கு கணிப்பு முடிவுகள், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று தெரிவிக்கின்றன. 
"டைம்ஸ் நௌ' தொலைக்காட்சி வெளியிட்ட கணிப்பில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 296-306 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 126-132 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"சி-வோட்டர்' அமைப்புடன் இணைந்து ரிபப்ளிக் தொலைக்காட்சி நடத்திய வாக்கு கணிப்பில், பாஜக கூட்டணி 287 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 128 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், "நேதா-நியூஸ் எக்ஸ் தொலைக்காட்சி', ஏபிபி நியூஸ் தொலைக்காட்சி-நீல்சன் வெளியிட்ட வாக்கு கணிப்புகளில், பாஜக கூட்டணி ஆட்சியமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக கூட்டணி 267 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 127 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று ஏபிபி நியூஸ் தொலைக்காட்சி-நீல்சன் அமைப்பின் வாக்கு கணிப்பு தெரிவிக்கிறது. இதேபோல், பாஜக கூட்டணி 242 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 164 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று நேதா-நியூஸ் எக்ஸ் தொலைக்காட்சி வெளியிட்ட வாக்கு கணிப்பு தெரிவிக்கிறது.
"நியூஸ் 18 தொலைக்காட்சி வெளியிட்ட வாக்கு கணிப்பில், பாஜக கூட்டணி 336 தொகுதிகளில் வெற்றி பெறும்; அதில், பாஜக மட்டுமே ஆட்சியமைப்பதற்குத் தேவையான 272-க்கும் கூடுதலான தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணிக்கு 82 தொகுதிகளே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், காங்கிரஸ் 46 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014-இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 336 தொகுதிகளைக் கைப்பற்றியிருந்தது. அதில், பாஜக மட்டும் 282 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. காங்கிரஸ் கட்சிக்கு 44 இடங்கள் மட்டுமே கிடைத்தன.
உத்தரப் பிரதேசத்தில்...: நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், அகிலேஷ் யாதவின் சமாஜவாதி கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்துள்ளன.  பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ்-சமாஜவாதி கூட்டணி என்று மும்முனைப் போட்டி நிலவும் இந்த மாநிலத்தில், கடந்த 2014-இல் பெற்ற பெரும்பான்மை வெற்றியை இந்த முறை பாஜக கூட்டணி பெறாது என்று பெரும்பாலான வாக்கு கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. 
உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில், பாஜக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று சி வோட்டர்-ரிபப்ளிக் தொலைக்காட்சியின் வாக்கு கணிப்பு தெரிவிக்கிறது. 
இருப்பினும், பாஜக கூட்டணி 46-57 தொகுதிகளிலும், சமாஜவாதி-பகுஜன் சமாஜ் கூட்டணி 15-29 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று ஜன் கி பாத் அமைப்பு நடத்திய வாக்கு கணிப்பு தெரிவிக்கிறது.
அந்த மாநிலத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு 56 தொகுதிகளும், பாஜக கூட்டணிக்கு 22 தொகுதிகளும் கிடைக்கும் என்று ஏபிபி நியூஸ் தெரிவிக்கிறது.
கடந்த 2014-இல்  மொத்தமுள்ள 80 தொகுதிகளில், பாஜக 71 தொகுதிகளிலும் அதன் கூட்டணிக் கட்சியான அப்னா தளம் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
மேற்கு வங்கத்தில்...: மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில், பாஜகவுக்கு 11 தொகுதிகள் கிடைக்கலாம் என்று சி-வோட்டர் ரிபப்ளிக் தொலைக்காட்சியும், 16 தொகுதிகள் கிடைக்கலாம் என்று ஏபிபி நியூஸ் தொலைக்காட்சியும் தெரிவிக்கின்றன.
ஒடிஸாவில்...: ஒடிஸாவில் 9 இடங்களில் பாஜக வெற்றிபெற வாய்ப்புள்ளதாக, ஏபிபி தொலைக்காட்சி தெரிவிக்கிறது. கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதியில் மட்டும் பாஜக வெற்றி பெற்றது.


                                  பாஜக கூட்டணி    காங்கிரஸ் கூட்டணி

டைம்ஸ் நெள                     296-306    126-132
சி-வோட்டர்- ரிபப்ளிக்    287    128
நேதா-நியூஸ் எக்ஸ்          242    164
ஏபிபி நியூஸ்-நீல்சன்       267    127
நியூஸ்18                                 336 (பாஜக-272+)    82 (காங்கிரஸ்-46)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com