மோடி தங்கி தியானம் செய்த கேதார்நாத் குகையின் ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா?

உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோயிலுக்கு சனிக்கிழமை சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள குகையில் சுமார் 17 மணி நேரம் தியானம் மேற்கொண்டார்.
மோடி தங்கி தியானம் செய்த கேதார்நாத் குகையின் ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா?


உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோயிலுக்கு சனிக்கிழமை சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள குகையில் சுமார் 17 மணி நேரம் தியானம் மேற்கொண்டார்.

பின்னர் பத்ரிநாத் கோயிலுக்குச் சென்ற அவர் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு நடத்தினார்.

இமயமலையில் 11,755 அடி உயரத்தில் அமைந்துள்ள கேதார்நாத் கோயிலில், பாரம்பரிய உடையணிந்து வழிபாடு நடத்திய அவர், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்களை ஆய்வு செய்தார். பின்னர், கேதார்நாத் கோயிலுக்கு அருகே உள்ள குகைக்கு பிற்பகல் 2 மணியளவில் சென்று தியானத்தில் அமர்ந்தார். பின்னர், ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு குகையிலிருந்து வெளியே வந்த பிரதமர் மோடி, மீண்டும் கேதார்நாத் கோயிலில் வழிபட்டதுடன், சிறப்பு பூஜைகளிலும் பங்கேற்றார். 

கேதார்நாத் - பத்ரிநாத் ஆகிய கோயில்களும் குளிர்கால இடைவெளிக்கு பிறகு மே மாதம் முதல்வாரத்தில்தான் திறக்கப்பட்டன.

இந்த நிலையில், பிரதமர் மோடி தங்கியிருந்து தியானம் மேற்கொண்ட குகைக் கோயிலைப் பற்றிய தகவல்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

அது பற்றி பார்க்கலாம்..
பிரதமர் மோடி தங்கியிருந்து தியானம் செய்த குகையின் ஒரு நாள் வாடகை ரூ.990 மட்டுமே. இங்கு உயர்தர வசதிகள் கிடைக்காவிட்டாலும், இந்த குகை அறைக்குள் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

இந்த குகையின் பெயர் ருத்ர தியானக் குகையாகும். இதனை கேதார்நாத் வரும் பக்தர்களுக்காக உத்தரகாண்ட் அரசு கடந்த ஆண்டு கட்டமைத்தது. கேதார்நாத் கோயிலில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் இந்த குகை அமைந்துள்ளது. இந்த குகை, கேதார்நாத் கோயில் மற்றும் பைரவ்நாத் கோயிலை நோக்கியவாறு அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த குகைக்குள் இருக்கும் வசதிகளாவது..

  • சுத்தமான குடிநீர் வசதி
  • மின்சார வசதி மற்றும் செல்போனை சார்ஜ் செய்யும் வசதி
  • ஒரு மெத்தை
  • காலையில் தேனீர், காலை சிற்றுணவு, மதிய உணவு, மாலையில்  தேனீர், இரவு உணவு.
  • 24 மணிநேரமும் பணியாற்றும் உதவியாளர் ஒருவர் இருப்பார். அவரை அழைக்க குகைக்குள் ஒரு பெல்  அமைக்கப்பட்டிருக்கும்.
  • எந்த அவசர உதவியாக இருந்தாலும் மேலாளரை தொடர்பு கொள்ள தொலைபேசி வசதியும் செய்யப்பட்டுள்ளது.

இந்த குகையை முன்பதிவு செய்ய வேண்டும் என்றால் சில விதிமுறைகளும் உள்ளன..

அவை

  • இந்த குகையை குறைந்தபட்சம் 3 நாட்களுக்காவது முன்பதிவு செய்ய வேண்டும்.
  • இந்த குகையில் தங்கியிருக்க வேண்டும் என்றால் இரண்டு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். ஒன்று குப்தகாசியிலும், மற்றொன்று கேதார்நாத்திலும் மேற்கொள்ளப்படும்.
  • நீங்கள் மனதளவிலும், உடலளவிலும் தகுதியானவர் என்று தெரிய வந்தால் மட்டுமே உங்களுக்கு இந்த குகை வாடகைக்கு விடப்படும்.
  • இந்த தியானக் குகையில் தனி நபர் அதாவது ஒரே ஒருவர் மட்டுமே தங்கியிருக்க அனுமதி வழங்கப்படும்.

இந்த குகை அறையில் தங்கியிருக்க முன்பதிவு செய்வதற்கான இணையதள முகவரி..
http://gmvnl.in/newgmvn/trh.asp?id=161

இந்த குகையில் தங்கியிருந்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கேதார்நாத் கோயிலில் வழிபாடு நடத்தியதை பாக்கியமாக கருதுகிறேன். இந்த வழிபாட்டின்போது இறைவனிடம் நான் எதையும் வேண்டி கேட்கவில்லை. அது எனது குணமும் கிடையாது. மற்றவர்களிடம் எதையும் கேட்கும் இடத்தில் இறைவன் நம்மை வைக்கவில்லை. கொடுக்கும் இடத்தில்தான் வைத்துள்ளார் என்று தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com