வாக்குக் கணிப்புகள்: பாஜக வரவேற்பு; எதிர்க்கட்சிகள் நிராகரிப்பு

வாக்கு கணிப்புகளை பாஜக வரவேற்றுள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள் நிராகரித்துள்ளன.
வாக்குக் கணிப்புகள்: பாஜக வரவேற்பு; எதிர்க்கட்சிகள் நிராகரிப்பு

வாக்கு கணிப்புகளை பாஜக வரவேற்றுள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள் நிராகரித்துள்ளன.
மக்களவைக்கு 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்தது. இந்நிலையில், தேர்தலுக்குப் பின்பு எடுக்கப்பட்ட வாக்கு கணிப்புகள் ஞாயிற்றுக்கிழமை வெளியாகியுள்ளன. அதில் பெரும்பாலான வாக்கு கணிப்புகள், மத்தியில் பாஜக கூட்டணியே மீண்டும் ஆட்சியமைக்கும் எனத் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து தில்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக செய்தித் தொடர்பாளர் ஜி.வி.எல். நரசிம்ம ராவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், "ஈடு இணையில்லாத அர்ப்பணிப்பு உணர்வுடன் நாட்டுக்கு சேவையாற்றிய மோடியின் தலைமைக்கு சாதகமாக வாக்குகள் விழுந்திருப்பதை வாக்கு கணிப்புகள் வெளிப்படுத்துகின்றன. நல்ல நிர்வாகத்தை ஆதரித்து மக்கள் மீண்டும் வாக்களித்திருப்பது பொது மக்களின் தீர்ப்பு மூலம் நிரூபணமாகியுள்ளது. அடிப்படையில்லாத குற்றச்சாட்டுகளையும், பொய்களையும் தெரிவித்து அவதூறு பரப்பி வந்த எதிர்க்கட்சிகளுக்கு விழுந்த பேரடியாகும்' என்றார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கூறுகையில், "வாக்கு கணிப்புகள் அனைத்தும் தவறு. இதற்கு ஆஸ்திரேலிய தேர்தல் முடிவுகளே உதாரணம். இதுபோல் பல்வேறு  வாக்கு கணிப்புகளும் தவறாக இருந்தன. ஆதலால் 23ஆம் தேதி வரை தேர்தல் முடிவுகள் வெளியாக காத்திருப்போம்' என்றார்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ஜா வெளியிட்டுள்ள பதிவில், "மௌனமாக இருப்போர்தான், 23ஆம் தேதி முடிசூடுவர்' என்று தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் டி. ராஜா கூறுகையில், "வாக்கு கணிப்பு சில நேரம் சரியாக இருந்துள்ளது. சில நேரம் தவறாகியுள்ளது. ஆதலால் தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை காத்திருப்போம்' என்றார்.
திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், "வாக்கு கணிப்பு கட்டுக்கதையை நான் நம்புவதில்லை. இந்த கட்டுக்கதை மூலம், ஆயிரக்கணக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இடமாற்றம் செய்யவோ அல்லது அதில் தில்லு முல்லு செய்யவோ திட்டமிடப்பட்டிருக்கலாம். ஆதலால் இந்த நேரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒற்றுமையாகவும், உறுதியாகவும், நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். இந்த போராட்டத்தில் நாம் அனைவரும் ஒன்றாக ஈடுபடுவோம்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் செயல் தலைவருமான ஒமர் அப்துல்லா, சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவுகளில், "அனைத்து வாக்கு கணிப்பையும் தவறு எனத் தெரிவிக்க முடியாது. தொலைக்காட்சி பெட்டியை செயலிழக்கம் செய்யவும், சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறவும் தற்போது நேரம் வந்துள்ளது. வரும் 23ஆம் தேதி, இந்த பூமி, அதன் அச்சில்தான் சுற்றுகிறதா என்பதைக் காண காத்திருப்போம்' எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com