எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டும் சந்திரபாபு நாயுடுவின் முயற்சி தோல்வியடையும்: சிவசேனை

எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒன்று திரட்டி மத்தியில் பாஜக அல்லாத அரசை அமைத்துவிடலாம் என்ற சந்திரபாபு நாயுடுவின் முயற்சி பலிக்காது என்று சிவசேனை கட்சி தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒன்று திரட்டி மத்தியில் பாஜக அல்லாத அரசை அமைத்துவிடலாம் என்ற சந்திரபாபு நாயுடுவின் முயற்சி பலிக்காது என்று சிவசேனை கட்சி தெரிவித்துள்ளது.
பெரும்பாலான வாக்குக் கணிப்பு முடிவுகள் பாஜக கூட்டணிக்கு சாதகமாக வந்துள்ள நிலையிலும், மத்தியில் பாஜக அல்லாத கூட்டணி அரசை அமைத்துவிட வேண்டும் என்பதில் ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு தீவிரமாக உள்ளார். இதற்காக கடந்த இரு நாள்களாக காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி ஆகியோரை சந்தித்துப் பேசினார். முன்னதாக திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் ஆகியோரையும் சந்திரபாபு நாயுடு சந்தித்து கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், இதனை விமர்சித்து சிவசேனை கட்சிப் பத்திரிகையான "சாம்னா'வில் திங்கள்கிழமை வெளியான தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
மத்தியில் பாஜக ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால், தேர்தல் முடிவுகள் வரும் நாளில் இந்தக் கூட்டணி காணாமல் போய்விடும். சந்திரபாபு நாயுடு தேவையில்லாமல் வீண் பயணங்களையும், சந்திப்புகளையும் மேற்கொண்டு வருகிறார். அவரது முயற்சிகள் எதுவும் நடக்காது. ஏனெனில், சிறு கட்சிகளின் ஆதரவுடன், தவழ்ந்து செல்லும் ஆட்சி இந்த நாட்டுக்குத் தேவையில்லை என்று மக்கள் ஏற்கெனவே முடிவு செய்துவிட்டனர். சிறப்பான தலைமையும், வலுவான ஆட்சியும்தான் நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்ல முடியும்.
மத்தியில் வலுவான ஆட்சி அமையாமல், கூட்டணி ஆட்சி அமைந்தால்தான் தாங்கள் ஆதாயமடைய முடியும் என்று சில பிராந்தியக் கட்சித் தலைவர்கள் திட்டமிடுகின்றனர். ஆனால் மத்தியில் பாஜக தலைமையில் மீண்டும் வலுவான ஆட்சி அமைய வேண்டும் என்று மக்கள் ஏற்கெனவே முடிவு செய்துவிட்டனர் என்று "சாம்னா'வில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com