அமரீந்தர்-சித்து மோதல் போக்கு குறித்து அறிக்கை கோரியது காங்கிரஸ் மேலிடம்

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து இடையே நிலவும் மோதல் போக்கு குறித்து காங்கிரஸ் மேலிடம் அறிக்கை கோரியுள்ளது.


பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து இடையே நிலவும் மோதல் போக்கு குறித்து காங்கிரஸ் மேலிடம் அறிக்கை கோரியுள்ளது.
பாகிஸ்தான் பகுதியில் நடைபெற்ற கர்தார்பூர் வழித்தட திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் அழைப்பை ஏற்று சித்து கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியை புறக்கணிக்கும்படி சித்துவை முதல்வர் அமரீந்தர் சிங் வலியுறுத்தியிருந்தார். இதற்கு சித்து செவிமடுக்கவில்லை. இதையடுத்து அமரீந்தர் சிங், சித்து இடையே கருத்து வேறுபாடு உருவானது.
இந்நிலையில், சித்துவின் மனைவி நவ்ஜோத் கௌர், அண்மையில் அளித்த பேட்டியில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட தமக்கு வாய்ப்பு கிடைக்காததற்கு அமரீந்தர் சிங்தான் காரணம் என்று குற்றம்சாட்டியிருந்தார். இந்த விவகாரத்தில் தனது மனைவிக்கு சித்து ஆதரவு தெரிவித்தார்.
இதுமட்டுமன்றி, சீக்கியர்களின் புனித நூல் அவமதிக்கப்பட்ட சம்பவத்தில் சிரோமணி அகாலிதளம் தலைவர்கள் பிரகாஷ் சிங் பாதல், சுக்பீர் சிங் பாதல் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என்று அமரீந்தர் சிங்குக்கு சித்து கேள்வியெழுப்பினார். இதைத் தொடர்ந்து, பொறுப்பற்ற செயல்களால் காங்கிரஸ் கட்சிக்கு சித்து பாதிப்பை ஏற்படுத்துவதாக அமரீந்தர் சிங் குற்றம்சாட்டினார்.
இதுபோல், அமரீந்தர் சிங்கும், சித்துவும் மோதல் போக்கில் ஈடுபட்டிருப்பது காங்கிரஸ் மேலிடத்துக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாகரிடம், அமரீந்தர் சிங் - சித்து இடையேயான மோதல் போக்கு குறித்து காங்கிரஸ் மேலிடம் அறிக்கை கோரியுள்ளது.  பஞ்சாப் மாநிலத்துக்கான காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வையாளர் ஆஷா குமாரி, இந்த அறிக்கையை கோரியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அனைத்து நிகழ்வுகள் குறித்தும் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் குருதாஸ்பூர் தொகுதியில் சுனில் ஜாகர் போட்டியிடுகிறார். தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடன், அவருக்கு போதிய நேரம் கிடைக்கும். அப்போது தனது அறிக்கையை கட்சி மேலிடத்திடம் அளிப்பார் என்றார்.
இதனிடையே, அமரீந்தர் சிங்குக்கு, பஞ்சாப் காங்கிரஸ் மூத்த தலைவர்களும், அமைச்சர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மூத்த அமைச்சர் சாது சிங் தரம்சாட், சித்து தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com