தோல்வி பயத்தால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது எதிர்க்கட்சிகள் சந்தேகம்: பாஜக புகார்

மக்களவைத் தேர்தலில் தோல்வி வரலாம் என்பதால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்புவதாக பாஜக புகார் தெரிவித்துள்ளது.


மக்களவைத் தேர்தலில் தோல்வி வரலாம் என்பதால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்புவதாக பாஜக புகார் தெரிவித்துள்ளது.
தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்குப் பிறகு, தில்லியில் 22 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு சென்று மனு அளித்தனர். அதில் மக்களவைத் தேர்தலில் பதிவான  வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும் முன்பு, தேர்வு செய்த வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் அனைத்தையும் வாக்கு ஒப்புகைச் சீட்டுகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. அதேபோல், இந்த சரி பார்ப்பு பணியின்போது சந்தேகம் எதுவும் எழும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட தொகுதியில் இருக்கும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 100 சதவீத வாக்கு ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண வேண்டும், மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் அதை ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள்  வலியுறுத்தியிருந்தன. இதையடுத்து, தேர்தலில் வெற்றி ஏற்படுகையில் அமைதியாக இருக்கும் எதிர்க்கட்சிகள், தோல்வி வரலாம் என்பதால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது சந்தேகம் எழுப்புகின்றன என்று பாஜக புகார் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தில்லியில் பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தேர்தலில் மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, அமரீந்தர் சிங் ஆகியோர் வெற்றி பெற்று ஆட்சியமைக்கையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது எதிர்க்கட்சிகள் சந்தேகப்படுவதில்லை. அந்நேரத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது எதிர்க்கட்சிகளுக்கு நல்லெண்ணம் வருகிறது. ஆனால் அதேநேரத்தில் பாஜக தேர்தலில் வெற்றி பெற்று, மக்களின் விருப்பப்படி, நாட்டின் பிரதமராக மோடி மீண்டும் வரலாம் என்று எதிர்பார்க்கப்படும்போது மட்டும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதான நம்பிக்கை எதிர்க்கட்சிகளுக்கு இல்லாமல் போய் விடுகிறது. பிரதமராக நரேந்திர மோடியை மக்கள் மீண்டும் தேர்வு செய்தால்,  தேர்தல் தோல்வியை எதிர்க்கட்சிகள் ஒப்புக் கொள்ள வேண்டும் என்றார்.
பாஜக மூத்த செய்தித் தொடர்பாளர் ஜி.வி.எல். நரசிம்ம ராவ் கூறுகையில், தேர்தலில் வெற்றி கிடைக்கும்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கைக்குரியதாக தெரிகிறது. ஆனால் தோல்வி வருகையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது எதிர்க்கட்சிகள் சந்தேகம் தெரிவிக்கின்றன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான எதிர்க்கட்சிகளின் இந்த அணுகுமுறை, பாசாங்குத்தனம் மற்றும் விஷமத்தனம் கொண்டதாகும். தேர்தலில் பாஜக வெற்றி பெறலாம் என்ற ஊக அடிப்படையிலான கருத்தை அப்பட்டமாக குற்றம்சாட்டும் எதிர்க்கட்சிகளின் செயலானது, இந்திய ஜனநாயகத்தை அவமதிக்கும் செயலாகும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com