மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் கவலையளிக்கின்றன:  பிரணாப் முகர்ஜி

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லு முல்லு செய்யப்பட்டதாக குற்றம்சாட்டி வெளியாகும் செய்திகள் கவலையளிக்கிறது என்று முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் கவலையளிக்கின்றன:  பிரணாப் முகர்ஜி


மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லு முல்லு செய்யப்பட்டதாக குற்றம்சாட்டி வெளியாகும் செய்திகள் கவலையளிக்கிறது என்று முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுட்டுரையில் அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
வாக்காளர்களின் தீர்ப்பில் தில்லு முல்லு செய்யப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டி செய்திகள்  வெளியாவது கவலையளிக்கிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு, தேர்தல் ஆணையத்தின் கைகளிலேயே உள்ளது. இந்த பணியை தேர்தல் ஆணையம் செய்ய வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் முற்றுப்புள்ளி வேண்டும் என்று அந்தப் பதிவில் பிரணாப் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய பிரணாப், தேர்தல் ஆணையத்தை வெகுவாக பாராட்டியிருந்தார். அவர் பேசுகையில்,  நாட்டின் முதல் தலைமைத் தேர்தல் ஆணையர் சுகுமார் சென் முதல் இப்போதைய தேர்தல் ஆணையர்கள் வரை, தேர்தல் ஆணையத்தை சிறப்பாக வழிநடத்திச் செல்கின்றனர். அந்த வகையில் இப்போதைய மக்களவைத் தேர்தலும் சிறப்பாக நடத்தப்பட்டது என்றார்.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து விமர்சித்து வந்தது. முக்கியமாக பாஜகவுக்கு சாதகமாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக முன்பு இருந்த பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் கட்சியின் கருத்துக்கு மாறாக பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு காங்கிரஸ் கட்சியும் தனது அதிருப்தியை வெளியிட்டது. அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பி.எல்.பூனியா கூறுகையில், பிரதமர் மோடி தேர்தல் நடத்தை நெறிமுறை மீறல்களில் ஈடுபட்டார். ஆனால், இவை அனைத்தில் இருந்தும் அவரை தேர்தல் ஆணையம் விடுவித்தது. அதனை முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் சரியாக தெரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன் என்றார்.
இதைத் தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லு முல்லு செய்யப்பட்டதாக குற்றம்சாட்டி வெளியாகும் செய்திகள் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக பிரணாப் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com