தோல்வி பயத்தால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது  எதிர்க்கட்சிகள் புகார்

மக்களவைத் தேர்தலில் தோற்று விடுவோம் என்கிற அச்சத்தால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்புகின்றன
தோல்வி பயத்தால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது  எதிர்க்கட்சிகள் புகார்


மக்களவைத் தேர்தலில் தோற்று விடுவோம் என்கிற அச்சத்தால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்புகின்றன என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று வாக்கு கணிப்பு முடிவுகள் வெளியான நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பி வருகின்றன. அதுமட்டுமன்றி வாக்குப்பதிவு இயந்திரங்கள் இடம் மாற்றப்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் புகார் அளித்தன.
இந்நிலையில், தோல்வி பயத்தால்தான் இவ்வாறு எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன என்று அமித் ஷா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சுட்டுரையில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், மக்களவைத் தேர்தலின் 6-ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கு பின்னர், வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பின. இப்போது வாக்கு கணிப்பு முடிவுகள் வெளியானதும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது தீவிரமாக குற்றச்சாட்டுகளும், புகார்களும் தெரிவித்து வருகின்றன. 
வாக்குக் கணிப்பு முடிவுகளை கொண்டு எவ்வாறு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பலாம்? வாக்கு கணிப்பு முடிவுகளை சாதகமாக்கி கொள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் முயற்சி செய்வதாகவும், அதனால் வன்முறைகள் நிகழும் என்றும் எதிர்க்கட்சிகள் அச்சுறுத்துகின்றன.
தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் இந்த 22 எதிர்க்கட்சிகளும் ஜனநாயகத்துக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றன. நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், மக்களை அவமதிக்கும் வகையிலும், வாக்குப் பதிவு இயந்திரங்கள் குறித்து கேள்வி எழுப்புகின்றன. 
அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை நிர்பந்திப்பது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்குமாறு கோரிக்கை விடுவிப்பது சுயநலமே தவிர வேறொன்றும் இல்லை.ஒருவேளை எதிர்க்கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற்றால், அதை கொண்டாடுவார்கள். தோற்கும் பட்சத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது குறைகூறுவார்கள்.வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது நம்பிக்கை இல்லையெனில், அவர்கள் ஏன் இதற்கு முன்னர் ஆட்சியமைத்தார்கள்?
வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்றால், அதை நிரூபிக்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சவால் விட்டது. ஆனால் அந்த சவாலை ஏற்க எந்த கட்சியும் முன்வரவில்லை.
ஆனால், இப்போது வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து குறைகூறி நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் என்று குற்றம்சாட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com