உ.பி.யில் பிரியங்காவின் பிரசாரத்தால் காங்கிரஸூக்கு பயனில்லை

உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டாலும், காங்கிரஸூக்கு அதிக இடங்களில் அவரால் வெற்றியைத் தேடி தர முடியவில்லை.
உ.பி.யில் பிரியங்காவின் பிரசாரத்தால் காங்கிரஸூக்கு பயனில்லை

உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டாலும், காங்கிரஸூக்கு அதிக இடங்களில் அவரால் வெற்றியைத் தேடி தர முடியவில்லை.
உத்தரப் பிரதேச மாநில கிழக்குப் பகுதிக்கான காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக பிரியங்கா (47) கடந்த ஜனவரி மாதம் நியமிக்கப்பட்டார். இதன்மூலம் அரசியலுக்கு அதிகாரப்பூர்வமாக வந்த பிரியங்கா, மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற காரணமாகத் திகழ்வார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. 
உத்தரப் பிரதேசத்தில் தொடர் தோல்விகளால் துவண்டிருந்த காங்கிரஸ் தொண்டர்களிடையே பிரியங்காவின் அரசியல் பிரவேசம் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரியங்கா சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் மறுவடிவமாகவும், காங்கிரûஸ மீட்க வந்த மீட்பராகவும் பிரியங்காவை காங்கிரஸ் தொண்டர்கள் கருதியதால், பிரசாரத்துக்கு சென்ற இடமெல்லாம் அவருக்கு கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனால் உத்தரப் பிரதேசத்தில் பாஜக, சமாஜவாதி-பகுஜன் சமாஜ் கூட்டணிக்கு காங்கிரஸ் பலத்த போட்டியை தரும்; சென்ற தேர்தலைக் காட்டிலும் இத்தேர்தலில் அதிக தொகுதிகளை அக்கட்சி கைப்பற்றும் என்று கருதப்பட்டது.
இருப்பினும், மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் எதிர்பார்த்ததுபோல் காங்கிரஸூக்கு வெற்றி கிடைக்கவில்லை. மாநிலத்தின் பல தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள், 3ஆவது இடத்தையே பிடித்துள்ளனர். கடந்த தேர்தலைப் போல, இந்தத் தேர்தலிலும் பாஜக 50க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
இந்த தேர்தல் முடிவுகள்,மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் பிரியங்கா தீவிர பிரசாரம் மேற்கொண்டும், அதனால் காங்கிரஸ் எந்தப் பயனும் அடையவில்லை என்பதையே வெளிகாட்டுகிறது. பிரியங்காவின் பிரசாரக் கூட்டங்களுக்கு அதிக அளவில் மக்கள் திரண்டு வந்தபோதும், அது தேர்தலில் காங்கிரஸூக்கான  வாக்குகளாக மாறவில்லை. மக்களவைத் தேர்தலில், உத்தரப் பிரதேசத்தில் அதிக இடங்களில் வெற்றி பெறும்பட்சத்தில், அந்த மாநில சட்டப்பேரவைக்கு 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலை புதிய நம்பிக்கையுடன் எதிர்கொள்ள காங்கிரஸ் திட்டமிட்டிருந்தது. ஆனால் எதிர்பார்த்ததற்கு மாறாக தேர்தல் முடிவுகள் வந்துள்ளது, உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் தொண்டர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com