"அதுவும் 23, இதுவும் 23, தேர்தல் முடிவுகள் வந்ததும் 23.. சந்திரபாபு நாயுடுவை கடவுள் தண்டித்துவிட்டார்": ஜெகன்

ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் சட்டப்பேரவை குழு தலைவராக அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். 
"அதுவும் 23, இதுவும் 23, தேர்தல் முடிவுகள் வந்ததும் 23.. சந்திரபாபு நாயுடுவை கடவுள் தண்டித்துவிட்டார்": ஜெகன்


ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் சட்டப்பேரவை குழு தலைவராக அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். 

ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 175 தொகுதிகளில், 151 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 102 இடங்களில் வெற்றி பெற்றிருந்த தெலுங்கு தேசம் கட்சி இந்த முறை வெறும் 23 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 

இதேபோல் மக்களவைத் தேர்தலிலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 22 இடங்களில் வெற்றி கண்டது. 

இந்த வெற்றிகளைத் தொடர்ந்து, அமராவதியில் இன்று (சனிக்கிழமை) புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஒய்எஸ்ஆர் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். 

இதைத்தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய ஜெகன்மோகன் ரெட்டி,

"நேர்மையற்றவர்கள் நிச்சயம் கடவுளால் தண்டிக்கப்படுவார்கள் என்பதை ஆந்திர தேர்தல் முடிவுகள் காண்பிக்கிறது.

2014-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் 23 சட்டப்பேரவை உறுப்பினர்களை சந்திரபாபு நாயுடு வாங்கினார். தற்போது அவரிடம் 23 இடங்கள் மட்டுமே உள்ளது. தேர்தல் முடிவுகளும் மே 23-ஆம் தேதி வெளியானது. 23 என்ற எண்ணை வைத்து கடவுள் அழகான தீர்ப்பை எழுதியுள்ளார். 

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் 3 மக்களவை உறுப்பினர்களையும் சந்திரபாபு நாயுடு சட்டத்துக்கு புறம்பாக வாங்கினார். தற்போது அவரது கட்சி 3 மக்களவைத் தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 

50 சதவீத வாக்குகளை பெறுவது என்பது சாதாரண காரியம் அல்ல. இந்த 5 ஆண்டுகளில் நாம் எப்படி செயல்படுகிறோமோ அதன் அடிப்படையில்தான் 2024-இல் நமது வெற்றி இருக்கும் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்" என்றார். 

ஜெகன்மோகன் ரெட்டி வரும் 30-ஆம் தேதி முதல்வர் பொறுப்பை ஏற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com