காஷ்மீர்: அல் காய்தாவுடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்பின் தலைவர் சுட்டுக்கொலை

தெற்கு காஷ்மீரில் உள்ள கிராமம் ஒன்றில் சர்வதேச பயங்கரவாத அமைப்பான அல்-காய்தாவுடன் தொடர்புடைய அன்சர் காஜ்வத்-உல்-ஹிந்த் அமைப்பின் தலைவர் ஜாகிர் மூசாவை பாதுகாப்புப்படையினர் வியாழக்கிழமை இரவு

தெற்கு காஷ்மீரில் உள்ள கிராமம் ஒன்றில் சர்வதேச பயங்கரவாத அமைப்பான அல்-காய்தாவுடன் தொடர்புடைய அன்சர் காஜ்வத்-உல்-ஹிந்த் அமைப்பின் தலைவர் ஜாகிர் மூசாவை பாதுகாப்புப்படையினர் வியாழக்கிழமை இரவு சுட்டுக்கொன்றனர்.
இதுகுறித்து ராணுவ செய்தித்தொடர்பாளர் ராஜேஷ் கலியா கூறியதாவது: ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டம், டட்சரா கிராமப்பகுதியில் பதுங்கியிருந்த அந்த பயங்கரவாதக்குழுவின் தலைவரை பாதுகாப்புப்படையினர் வியாழக்கிழமை இரவு சுட்டுக் கொன்றனர். 
பின்னர் அந்த பயங்கரவாதியின் உடலை வெள்ளிக்கிழமை காலை கைப்பற்றி விசாரணை நடத்திய போதுதான், இறந்தவர் ஜாகிர் மூசா என்பதும், அவர் அன்சர் காஜ்வத்-உல்-ஹிந்த் என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவர் என்பதும் தெரிய வந்தது. அவர் தங்கியிருந்த இடத்தில் ஏராளமான ஆயுதங்களும், வெடிப்பொருள்களும் பாதுகாப்புப்படையினரால் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்தார். 
மூத்த காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது: டட்சரா கிராமத்தில் ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்தத் தகவலின் பேரில் அந்த வீட்டைச்சுற்றி வளைத்தபோது, அவர்கள் தப்பிச் செல்ல முயன்றனர். அவர்களை சரணடையுமாறு கூறியபோது, அதை மறுத்து பாதுகாப்புப்படையினரை நோக்கி வெடிகுண்டுகளை வீசியும், ராக்கெட் லாஞ்சர்களை ஏவியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போது, ஏற்பட்ட துப்பாக்கிச்சண்டையில் ஜாகிர் மூசா சுட்டுக்கொல்லப்பட்டார்.  
இத்தாக்குதல் குறித்து, வியாழக்கிழமை இரவே சோபியான், புல்வாமா, அவந்திபோரா மற்றும் ஸ்ரீநகர் பகுதிகளில் தகவல் பரவியது. இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மூசாவுக்கு ஆதரவாக,  கோஷங்களை எழுப்பியதுடன், பல்வேறு போராட்டங்களிலும்  ஈடுபட்டனர். இதைதொடர்ந்து பதற்றம் நிறைந்த சில பகுதிகளில் அதிகாரிகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தினர். புல்வாமா, ஸ்ரீநகர், அனந்த்நாக் மற்றும் புத்காம் மாவட்டங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்களும் மூட உத்தரவிடப்பட்டுள்ளன. இணையதளச் சேவை காஷ்மீரின் பல்வேறு பகுதிகளிலும் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. 
கடந்த 2013 ஆம் ஆண்டு காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்புடன் இணைந்து பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டு வந்த மூசா பின்னர் அன்சர் காஜ்வத் உல் ஹிந்த் அமைப்பை உருவாக்கினார். பல்வேறு பயங்கரவாதச் செயலுடன் தொடர்பு கொண்டவரான ஜாகிர் மூசா பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு நிகழ்வில் தொடர்புடையவர் என தேசிய புலனாய்வு அமைப்பால் (என்ஐஏ) குற்றம்சாட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com