தேர்தல் களத்தில் ஜொலித்த திரை நட்சத்திரங்கள்!

திரையில் ஜொலித்தவர்கள் அரசியல் வாழ்க்கையிலும் ஜொலிப்பது அவர்களின் அதிர்ஷ்டம், நேரத்தை பொருத்தது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல். பாஜக, காங்கிரஸ்
தேர்தல் களத்தில் ஜொலித்த திரை நட்சத்திரங்கள்!

திரையில் ஜொலித்தவர்கள் அரசியல் வாழ்க்கையிலும் ஜொலிப்பது அவர்களின் அதிர்ஷ்டம், நேரத்தை பொருத்தது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல். பாஜக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பில் மக்களவைத் தேர்தலில் ஏராளமான திரை நட்சத்திரங்கள் களமிறங்கினர். இப்படி தேர்தலில் போட்டியிட்ட திரை நட்சத்திரங்கள் எண்ணிக்கையில் அதிகம் இருந்தாலும், வெற்றிக் கனியை ருசித்தது என்னவோ குறிப்பிட்ட சிலர்தான்.
2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் சன்னி தியோல், ஹேமமாலினி, கிரண் கெர், ரவி கிஷண், ஜெயப்ரதா, சுரேஷ் கோபி உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் போட்டியிட்டனர். காங்கிரஸ் சார்பில் ராஜ் பப்பர், ஊர்மிளா மடோண்கர், சத்ருகன் சின்ஹா ஆகியோரும், திரிணமூல் காங்கிரஸ் சார்பில் மூன் மூன் சென் உள்ளிட்டோரும் போட்டியிட்டனர்.
பாஜக மூலம் தேர்தல் களத்தில் முதன்முதலில் அறிமுகமான சன்னி தியோல், பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் தொகுதியில் போட்டியிட்டார். இத்தொகுதியில் சுமார் 82,000  வாக்குகள்  வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அரசியல் களத்திலும் தம்மால் ஜொலிக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார் சன்னி தியோல். அவருடைய தந்தை தர்மேந்திரா, பிகானீர் தொகுதியில் பாஜக சார்பில் கடந்த 2004ஆம் ஆண்டு வெற்றி பெற்றார். ஆனால் அதன்பிறகு அவர் தேர்தலில் மீண்டும் போட்டியிடவில்லை. அவருக்குப் பதிலாக அவரின் மனைவி ஹேமமாலினி, மகன் தியோல் ஆகியோர் போட்டியிட்டனர். இருவருக்கும் ஆதரவாக தர்மேந்திரா பிரசாரம் செய்தார்.
மதுரா தொகுதியில் போட்டியிட்ட ஹேமமாலினி, ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சியின் கன்வார் நரேந்திர சிங்கை தோல்வியுறச் செய்தார். இது மதுரா தொகுதியில் ஹேமமாலினி பெறும் 2ஆவது வெற்றியாகும்.
பாஜக சார்பில் தில்லி வடமேற்கு தொகுதியில் சுபி பாடகர் ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் போட்டியிட்டார். அத்தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் ககன் சிங்கை 5.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோற்கடித்தார். சண்டீகரில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட கிரண் கெர், முன்னாள் மத்திய அமைச்சரான காங்கிரஸின் பவன் குமார் பன்சாலை சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
சன்னி தியோலின் தில்லாஹி படத்தில் அவருடன் இணைந்து நடித்த ஊர்மிளா மடோண்கர்,  மக்களவைத் தேர்தலில் மும்பை வடக்குத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிமுகமானார். ஆனால் அவரால் வெற்றித் தடம்பதிக்க முடியவில்லை. பாஜகவின் கோபால் ஷெட்டியிடம் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.


1980களில் திரையுலக தாரகைகளில் ஒருவராகத் திகழ்ந்த ஜெயப்ரதா, சமாஜவாதி கட்சியில் இருந்து பாஜகவுக்கு அண்மையில் அணி மாறினார். அவருக்கு ராம்பூர் தொகுதியில் வாய்ப்பளிக்கப்பட்டது. இருப்பினும், சமாஜவாதி மூத்த தலைவர் ஆஸம் கானிடம் அவர் தோல்வியடைந்தார். இதேபோல், மலையாள திரையுலக சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான சுரேஷ் கோபி, திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் பெரும் எதிர்பார்ப்புடன் போட்டியிட்டார். அவருக்கும் வெற்றி வசமாகவில்லை.
பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்த சத்ருகன் சின்ஹா, பிகார் மாநிலம் பாட்னா சாஹிப் தொகுதியில் 3ஆவது முறையாக போட்டியிட்டார். அவரை எதிர்த்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாதை பாஜக களமிறக்கியது. 2 முறை ஏற்கெனவே வெற்றி பெற்ற சத்ருகன் சின்ஹா, இம்முறை 2.8 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அவரின் மனைவி பூனம் சின்ஹா, லக்னௌ தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் சுமார் 4 லட்சம்  வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.
தேர்தலுக்கு முன்பு போஜ்புரி நடிகர் ரவி கிஷண், காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். அவர் கோரக்பூர் தொகுதியில் 7.14 லட்சம்  வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்ட மூன் மூன் சென், பாஜக வேட்பாளரும் நடிகருமான பாபுல் சுப்ரியோவிடம் 1.7 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். அதேநேரத்தில் திரிணமூல் சார்பில் போட்டியிட்ட மற்றொரு நடிகை நஸ்ரத் ஜஹான் ருஹி, சுமார் 4 லட்சம் வாக்குகள்  வித்தியாசத்தில் வென்றார். திரிணமூல் காங்கிரஸின் மற்றொரு திரையுலக வேட்பாளரான மிமி சக்ரவர்த்தி, ஜாதவ்பூர் தொகுதியில் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பாஜக வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் லாக்கெட் சட்டர்ஜி, ஹூக்ளி தொகுதியில் 73,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கினார்.
தேசிய விருது பெற்ற நடிகரான பிரகாஷ் ராஜ், மத்திய பெங்களூரு தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். அவருக்கு 3ஆவது இடமே கிடைத்தது. மாண்டியா தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட நடிகை சுமலதா அம்பரீஷுக்கு பாஜக ஆதரவு தெரிவித்தது. அவர் 7 லட்சம் வாக்குகள் பெற்று மக்களவைக்கு தேர்வானார்.
பரபரப்பாக நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலை அடுத்து, நாடாளுமன்றத்தில் சில திரை நட்சத்திரங்கள் ஜொலிப்பது உறுதியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com