அமேதி பாஜக கைவசமானதன் பின்னணி!

காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்பட்ட "அமேதி' மக்களவைத் தொகுதி, பாஜகவின் கைகளுக்கு தற்போது சென்று விட்டது.
அமேதி பாஜக கைவசமானதன் பின்னணி!

காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்பட்ட "அமேதி' மக்களவைத் தொகுதி, பாஜகவின் கைகளுக்கு தற்போது சென்று விட்டது. 1980ஆம் ஆண்டுகளில் இருந்து சோனியா காந்தியின் குடும்பத்தார் மட்டுமே, அத்தொகுதி எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டு வந்த நிலையில், அதை இத்தேர்தல் பொய்யாக்கியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் இருந்து 2 முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலம் வயநாட்டில் போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், அமேதி தொகுதியில் தோல்வி உறுதியாகி விட்டதால், வயநாட்டுக்கு ராகுல் காந்தி தப்பியோடுவதாக விமர்சித்தன. இதை காங்கிரஸ் கட்சி நிராகரித்தது. தென் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் செல்வாக்கை அதிகரிக்கவும், கட்சித் தொண்டர்களுக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தவும் வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிடுவதாக அக்கட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இருப்பினும், மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் 55,120  வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி தோல்வியடைந்தார். கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஸ்மிருதி இரானி, ராகுல் காந்தியிடம் 1,07,903 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தார்.  அந்தத் தோல்விக்கு இந்தத் தேர்தலில் பெற்ற வெற்றியின் மூலம், ஸ்மிருதி இரானி பழிதீர்த்துக் கொண்டார். அதேபோல், ராகுல் காந்தியை காங்கிரஸ் கோட்டையாக கருதப்பட்ட அமேதியில் தோற்கடித்தவர் என்ற பெருமையையும் ஸ்மிருதி இரானி பெற்றார்.
இந்தத் தோல்விக்கு ராகுல் காந்தியும், காங்கிரஸூம் அமேதியில் உள்ள கிராமப் பகுதிகளிலும், மிகவும் பின்தங்கிய பகுதிகளிலும் கவனம் செலுத்தாததே முக்கிய காரணமாகும். அமேதியில் உள்ள நகர்ப்புற பகுதிகளில் அதிக கவனம் கொடுத்து பிரசாரமும், பிற பணிகளையும் காங்கிரஸ் செய்து வந்தது. அதேநேரத்தில் கிராமப் பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க மறந்து விட்டது.  அமேதியின் பர்ஸத்கஞ்ச் விமான நிலையத்தில் தரையிறங்கும் ராகுல், அமேதி நகருக்கு நேராக செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். அங்கு மட்டுமே இருந்து கொண்டு தனது பணிகளை அவர் செய்து வந்தார். கிராமப் பகுதிகளுக்கு செல்வதில்லை. இதனால் கிராம மக்களுடன் அவரால் நேரடியாக தொடர்பு ஏற்படுத்த முடியவில்லை. பின்னர் காங்கிரஸ் பொது செயலாளராக பிரியங்கா நியமிக்கப்பட்டு, உத்தரப் பிரதேசத்தில் தீவிர சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்தபோதும், அவரும் கிராமப் பகுதிகளுக்கு வரவில்லை. அமேதியில் உள்ள நகர்பகுதிகளில் மட்டுமே தீவிர பிரசாரம் செய்தார். இதனால் பிரியங்காவின் பிரசாரமும் அமேதியில் உள்ள கிராமப் பகுதிகளில் இருக்கும் வாக்குகளை ராகுலுக்கு தேடி தரவில்லை. அதுமட்டுமல்லாமல், ராகுலை அமேதியில் உள்ள தொகுதியில் உள்ள எம்பி அலுவலகத்துக்கு கிராம மக்கள் சந்திக்க செல்லும்போது அங்கிருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் மேலாதிக்க மனோபாவத்துடன்  நடத்திய விதமும் மக்களிடையே அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
இதற்கு நேர்மாறாக, பாஜகவும், ஸ்மிருதி இரானியும் செயல்பட்டனர். கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த போதிலும், அத்தொகுதிக்கு ஸ்மிருதி இரானி அடிக்கடி சுற்றுப்பயணம் செய்தார். கடந்த 5 ஆண்டுகளில் அத்தொகுதியில் உள்ள கிராமப் பகுதிகளுக்கு அடிக்கடி சென்று அங்குள்ள மக்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை ஸ்மிருதி கேட்டார். இது பாஜக மீதும், ஸ்மிருதி இரானி மீதும் அமேதியில் உள்ள கிராம மக்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. இந்த நம்பிக்கை, மக்களவைத் தேர்தலில் ஸ்மிருதி இரானிக்கான வாக்குகளாக மாறி, அவருக்கு வெற்றியையும், ராகுல் காந்திக்கு தோல்வியையும் தந்தது.
கடந்த 2012, 2017ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல்களில், அமேதி தொகுதியில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒன்றில் கூட காங்கிரஸூக்கு வெற்றி கிடைக்கவில்லை. இருப்பினும் மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். இந்த நம்பிக்கையில் 2019ஆம் ஆண்டு தேர்தலில் தமக்கு வெற்றி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் ராகுல் மீண்டும் போட்டியிட்டார். ஆனால் கிராம மக்கள் ஏற்கெனவே பாஜகவுக்கும், ஸ்மிருதி இரானிக்கும் வாக்களிக்கும் முடிவை எடுத்துவிட்டதால், ராகுல் காந்தியின் நம்பிக்கை வீண் போய்விட்டது. கிராம  மக்களின் வாக்குகள் அனைத்தையும் பாஜகவும், ஸ்மிருதி இரானியும் அறுவடை செய்து தேர்தல் களத்தில் புதிய சாதனை படைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com