ம.பி: மாட்டிறைச்சி விற்றதாக இருவரை தாக்கிய 5 பசு பாதுகாவலர்கள் கைது

மத்தியப் பிரதேசத்தில் மாட்டிறைச்சி விற்றதாகக் கூறி இருவரை தாக்கிய 5 பசு பாதுகாவலர்களை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். 

மத்தியப் பிரதேசத்தில் மாட்டிறைச்சி விற்றதாகக் கூறி இருவரை தாக்கிய 5 பசு பாதுகாவலர்களை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். 
மத்தியப் பிரதேச மாநிலம், சியோனி பகுதியில் இரண்டு பேர் மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக சந்தேகமடைந்த பசு பாதுகாவலர்கள் என்று கூறப்படும் 5 பேர் கொண்ட கும்பல், அவர்களை வழிமறித்தது. அவர்களை கட்டி வைத்து, சரமாரியாக தாக்கியும், குச்சியால் அடித்தும் காயப்படுத்தினர்.  
முன்னதாக, இச்சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட விடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அவ்வாறு தாக்குதல் நடத்தும்போது, அந்த கும்பல் "ஜெய் ஸ்ரீராம்' என்ற வாசகத்தை கூறியபடியே தாக்கியது.  இதையடுத்து, அந்த கும்பலைச் சேர்ந்த 5 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். 
இதுகுறித்து, சியோனி எஸ்.பி. லலித் சாக்கியவார் கூறியதாவது: இந்த சம்பவம் கடந்த 22 ஆம் தேதி துண்டா சியோனி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மண்டலா சாலையில் நடைபெற்றது. இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தாக்குதல் நடத்திய 5 பேரும் கைது செய்யப்பட்டனர். கடந்த 23ஆம் தேதி சமூக வலைதளங்களில் பரவிய விடியோ பதிவின் அடிப்படையில் வழக்கு  செய்யப்பட்டது. 
பின்னர், அந்த விடியோ பதிவை சமூக வலைதளத்தில் இருந்து போலீஸார் அகற்றி விட்டனர். கைதானவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
மேலும், மாட்டிறைச்சி விற்பனை செய்ய தடை உள்ளதால் சட்ட விரோதமாக அவற்றை விற்பனை செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 140 கிலோ மாட்டிறைச்சியும், அதை கொண்டு செல்ல பயன்படுத்திய ஆட்டோ, இரு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. 
கைது செய்யப்பட்ட மூவரும் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர் என்று அவர் தெரிவித்தார். 
மெஹபூபா,ஒமர் அப்துல்லா கண்டனம்: இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி தனது சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவில், ""மத்தியப் பிரதேசத்தில் பசு பாதுகாவலர்கள் என்று கூறிக் கொள்ளும் சில நபர்கள் அப்பாவி முஸ்லிம்களை தாக்கிய சம்பவம் என்னை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தாக்குதல் நடத்திய குண்டர்கள் மீது மத்தியப் பிரதேசத்தை ஆளும் கமல்நாத் தலைமையிலான அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று பதிவிட்டுள்ளார். 
காஷ்மீரின் மற்றொரு முன்னாள் முதல்வரும்,  தேசிய மாநாட்டுக்கட்சியின் தலைவருமான ஓமர் அப்துல்லா வெளியிட்டுள்ள சுட்டுரையில், "இந்த விவகாரத்தில் இது வெறும் ஆரம்பம்தான். இதற்காக நீங்கள் ஏன் அழுகிறீர்கள். நாம் கட்டாயம் முன்னேறிச் செல்வோம். என்ன நடக்கிறது என்பதை நீங்கள் கவனித்து வந்தால் போதுமானது' என்று அதில் பதிவிட்டுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com