ஜாகீர் நாயக் வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம் டெபாசிட்!

இஸ்லாமிய மத போதகர் ஜாகீர் நாயக்கின் வங்கிக் கணக்கு மற்றும் அவரது "இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேஷன்' அமைப்பின் வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
ஜாகீர் நாயக் வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம் டெபாசிட்!

பயங்கரவாதத்தை பரப்பியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இஸ்லாமிய மத போதகர் ஜாகீர் நாயக்கின் வங்கிக் கணக்கு மற்றும் அவரது "இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேஷன்' அமைப்பின் வங்கிக் கணக்கில் அடையாளம் காணப்படாத நபர்கள் மூலம் கோடிக்கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டது அமலாக்கத் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

மும்பையைச் சேர்ந்த "இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேஷன்' அமைப்பின் நிறுவனரான ஜாகீர் நாயக், கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் இருந்து வெளியேறினார். அவர் மீது பயங்கரவாதத்தை தூண்டியது, கருப்புப் பண மோசடி என பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. தற்போது அவர் மலேசியாவில் உள்ளார். பிற மதத்தினருக்கு எதிராக, முஸ்லிம் இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட வேண்டும் என்ற நோக்கிலேயே அவரது உரைகள் அமைந்திருந்தன. இந்திய இளைஞர்களை தேசத்துக்கு எதிராக பயங்கரவாதத்தில் ஈடுபடத் தூண்டினார் என்பது அவர் மீதான முக்கியக் குற்றச்சாட்டாகும்.

இது தவிர, இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் ஜாகீர் நாயக் மற்றும் அவரது குடும்பத்தினர் கோடிக்கணக்கில் சொத்துகளை வாங்கிக் குவித்ததாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இவை அனைத்தும் கருப்புப் பணமாகும். இந்த குற்றச்சாட்டு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், ஜாகீர் நாயக் மற்றும் அவரது அமைப்பின் வங்கிக் கணக்கு தொடர்பான அமலாக்கத்துறையின் விசாரணை அறிக்கையில் உள்ள தகவலை பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சிட்டி வங்கி, டிசிபி வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளில் ஜாகீர் நாயக் மற்றும் அவரது அமைப்புக்கு கணக்குகள் உள்ளன. இந்த வங்கிக் கணக்குகளில் நன்கொடை மற்றும் ஜகாத் (இஸ்லாமிய வழக்கப்படி ஏழைகளுக்கு அளிக்கும் நிதியுதவி) என்ற பெயரில் கோடிக்கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

உள்நாட்டில் மட்டுமின்றி ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, பஹ்ரைன், குவைத், ஓமன், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் ஜாகீர் நாயக்கின் வங்கிக் கணக்குக்கு பணம் வந்துள்ளது. இதில் பணத்தை டெபாசிட் செய்தவர்கள் யாரும் தங்கள் பெயரைத் தெரிவிக்கவில்லை. பெரும்பாலும் "நலம் விரும்பிகள்'  என்ற பெயரிலேயே பணத்தை அளித்துள்ளனர். மேலும், அனைத்துப் பணமும் ரொக்கமாகவே வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. வேறு வங்கிக் கணக்கில் இருந்து பரிமாற்றம் செய்யப்படவில்லை. 2003-04 முதல் 2016-17 வரை மட்டும் நன்கொடை மற்றும் ஜகாத் என்ற பெயரில் அவருக்கு ரூ.64.86 கோடி கிடைத்துள்ளது.

இந்தப் பணத்தை  "அமைதி மாநாடு'  நடத்துவது, தன்னிடம் பணியாற்றுபவர்களுக்கு ஊதியம் வழங்குவது என ஜாகீர் நாயக் செலவிட்டுள்ளார்.

"அமைதி மாநாடு' என்பது அவர் நடத்தும் இஸ்லாமிய மத பிரசார நிகழ்ச்சியாகும். இதுதவிர ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஜாகீர் நாயக் பலமுறை சென்று வந்துள்ளார் என்று அமலாக்கத்துறை விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுடன் ஜாகீர் நாயக்குக்கு தொடர்பு உண்டு என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தும் முன்பே அவர் வெளிநாட்டுக்குத் தப்பியது, சந்தேகத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

ஜாகீர் நாயக் ரூ.193.06 கோடி மதிப்பில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சொத்துகளை வாங்கியுள்ளார். இவை அனைத்தும் கணக்கில் வராத கருப்புப் பணமாகும். ஜாகீர் நாயக்கின் பல்வேறு முதலீடுகள் மற்றும் குடும்பத்தினருக்குச் சொந்தமான பல கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை ஏற்கெனவே முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com