பயங்கரவாதமற்ற சூழலை ஏற்படுத்துங்கள்: இம்ரானிடம் மோடி வலியுறுத்தல்

பயங்கரவாதமற்ற சூழலை ஏற்படுத்துங்கள்: இம்ரானிடம் மோடி வலியுறுத்தல்

இந்திய நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள நரேந்திர மோடியை, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஞாயிற்றுக்கிழமை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

இந்திய நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள நரேந்திர மோடியை, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஞாயிற்றுக்கிழமை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது நடைபெற்ற உரையாடலின்போது, "நமது பிராந்தியத்தில் அமைதியையும் வளத்தையும் உறுதி செய்வதற்கு, பயங்கரவாதம் இல்லாத சூழலை உருவாக்க வேண்டியது அவசியம்' என்று இம்ரான் கானிடம் மோடி வலியுறுத்தினார்.
பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை கடந்த பிப்ரவரி மாதம் நடத்திய அதிரடித் தாக்குதலுக்குப் பின்னர், தற்போது இரு தலைவர்களும் முதல் முறையாக பேசியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மக்களவைத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 353 இடங்களைக் கைப்பற்றி, ஆட்சியை தக்கவைத்தது. இதில் பாஜக மட்டும் 303 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்கவுள்ளார்.
தொலைபேசியில் உரையாடல்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பிரதமர் மோடியை ஞாயிற்றுக்கிழமை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார். அதற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
இதுதொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "நமது பிராந்தியத்தில் அமைதி, வளம் மற்றும் வளர்ச்சியை உறுதி செய்வதற்கு, பயங்கரவாதம் இல்லாத சூழலை உருவாக்குவதும், நம்பிக்கையை கட்டமைப்பதும் அவசியம் என்று இம்ரான் கானிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார். மேலும், அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற தனது அரசின் கொள்கை, வறுமையை ஒழிக்க ஒருங்கிணைந்து செயலாற்றுவதற்காக இம்ரான் கானுக்கு தாம் ஏற்கெனவே வழங்கிய யோசனை ஆகியவற்றை குறிப்பிட்டு பிரதமர் பேசினார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த உரையாடலின்போது, "இரு நாட்டு மக்களின் வாழ்வையும் மேம்படுத்தும் வகையில் பரஸ்பரம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று விரும்புகிறேன். தெற்காசியாவில் அமைதி, வளர்ச்சி, வளம் ஆகியவற்றை மேம்படுத்துவதில், பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற ஆர்வத்துடன் இருக்கிறேன்' என்று இம்ரான் கான் தெரிவித்ததாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் முகமது ஃபைசல் தெரிவித்துள்ளார்.
மோடி-இம்ரான் அடுத்த மாதம் சந்திப்பு: ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் மாநாடு, கிர்கிஸ்தானில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கிறது. இதில், மோடி மற்றும் இம்ரான் கான் இடையிலான சந்திப்புக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களின் கூட்டம், கடந்த 22-ஆம் தேதி நடைபெற்றது. இதில், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது, இந்தியாவுடனான அனைத்து பிரச்னைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க பாகிஸ்தான் ஆர்வத்துடன் இருப்பதாக குரேஷி தெரிவித்திருந்தார்.
முன்னதாக, இந்திய பிரதமராக பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தேர்வு செய்யப்படும் பட்சத்தில், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பிரச்னைகளுக்குத் தீர்வு காண வாய்ப்பிருக்கிறது என்று நம்புவதாக இம்ரான் கான் கடந்த ஏப்ரலில் கருத்து தெரிவித்திருந்தார். அதேபோல், மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த வியாழக்கிழமை வெளியானபோது, சுட்டுரை மூலம் பிரதமர் மோடிக்கு அவர் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
பின்னடைவு சரியாகுமா? ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் பயணித்த வாகனத்தை குறிவைத்து ஜெய்ஷ்-ஏ-முகமது இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவர் கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி தற்கொலைத் தாக்குதல் நடத்தினார். இதில் 40 வீரர்கள் பலியாகினர். இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானின் பாலாகோட்டில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் குண்டுவீசி தாக்குதல் நடத்தின. இதைத் தொடர்ந்து, இந்தியப் பகுதிக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த பாகிஸ்தான் போர் விமானங்கள் முயன்றன. ஆனால், அந்த முயற்சியை இந்திய விமானப் படை முறியடித்தது.
அடுத்தடுத்து நடைபெற்ற இந்த சம்பவங்களால் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இதுபோன்ற சூழலில், பிரதமர் மோடியும், இம்ரான் கானும் தொலைபேசியில் பேசியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பேச்சுவார்த்தை நடத்தத் தயார்

இஸ்லாமாபாத், மே 26: புதிய இந்திய அரசுடன் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார்.
முல்தானில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் இடையே ஷா முகமது குரேஷி செய்தியாளர்களிடம் பேசுகையில், "தெற்காசிய பிராந்தியத்தின் வளர்ச்சி, அமைதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு, இந்தியாவும் பாகிஸ்தானும் பிரச்னைகளுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்த வேண்டியது அவசியமாகும். புதிய இந்திய அரசுடன் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறது' என்றார்.
இந்தியாவில் மக்களவைத் தேர்தலில் பாஜக மிகப்பெரும் வெற்றி பெற்று, மத்தியில் விரைவில் ஆட்சியமைக்கவுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி, பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக குறிப்பிட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com