பள்ளியை நிறைவு செய்யாதோர் முதல் மருத்துவர் வரை: பலதரப்பட்ட நபர்களை மக்களவைக்கு அனுப்பிய பிகார்

பள்ளிப் படிப்பை நிறைவு செய்யாதோர் ஒருபுறம்; மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் என கல்வியில் உயர்நிலையில் இருப்பவர்கள் மறுபுறம் என பலதரப்பட்ட நபர்கள் பிகாரில் இருந்து
பள்ளியை நிறைவு செய்யாதோர் முதல் மருத்துவர் வரை: பலதரப்பட்ட நபர்களை மக்களவைக்கு அனுப்பிய பிகார்

பள்ளிப் படிப்பை நிறைவு செய்யாதோர் ஒருபுறம்; மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் என கல்வியில் உயர்நிலையில் இருப்பவர்கள் மறுபுறம் என பலதரப்பட்ட நபர்கள் பிகாரில் இருந்து எம்.பி.க்களாக தேர்வாகியுள்ளனர். 
பிகார் மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் பாஜக-ஐக்கிய ஜனதா தளம்-லோக் ஜனசக்தி கட்சிகள் அடங்கிய கூட்டணி 39 தொகுதிகளையும், காங்கிரஸ் ஒரு தொகுதியையும் கைப்பற்றியது. 
இதில், ஐக்கிய ஜனதா தளத்தின் எம்.பி.க்கள் அஜய் மண்டல், மஹாபலி சிங் தங்களது பள்ளிப் படிப்பை கூட நிறைவு செய்யாதவர்கள் ஆவர். அக்கட்சியின் வைத்தியநாத் மஹதோ, ராம்பிரீத் மண்டல், சந்தேஷ்வர் பிரசாத் சந்திரவன்ஷி ஆகிய எம்.பி.க்கள் 10-ஆம் வகுப்பு வரை பயின்றுள்ளனர். 
பாஜக எம்.பி.க்களான வீணா தேவி மற்றும் பிரதீப் குமார், லோக் ஜனசக்தி எம்.பி. ராம் சந்திர பாஸ்வான் ஆகியோர் பள்ளிக்குப் பிறகு மேற்படிப்பு பயிலாதவர்களாவர். ஐக்கிய ஜனதா தளம் எம்.பி.க்களான கெளஷலேந்திர குமார், விஜய் மாஞ்சி, சந்தோஷ் குஷ்வாஹா ஆகியோரும், லோக் ஜனசக்தியின் சிரக் பாஸ்வானும் இடைநிலைக் கல்வி வரை மட்டும் பயின்றுள்ளனர். 
மறுபுறம், பாஜகவின் முதல் முறை எம்.பி.யான அசோக் யாதவ் ஆராய்ச்சி படிப்பை முடித்திருக்க, ஐக்கிய ஜனதா தளம் எம்.பி.யான தினேஷ் சந்திர யாதவ் கட்டுமான பொறியியலில் டிப்ளமோ முடித்துள்ளார். கோபால்கஞ்சின் ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. அலோக் குமார் சுமன் மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
அதேபோல், மக்களவைக்கு தேர்வாகியுள்ள பாஜக உறுப்பினர் பஷ்சிம் சம்பரான், காங்கிரஸ் உறுப்பினர் முகமது ஜாவித் ஆகியோரும் மருத்துவம் பயின்றவர்கள். பாஜக எம்.பி.க்களான ரவிசங்கர் பிரசாத், ராம் கிருபால் யாதவ், ராஜீவ் பிரதாப் ரூடி, ஆர்.கே. சிங் ஆகியோர் சட்டம் படித்தவர்களாவர். 
மேலும், அக்கட்சியின் கோபால்ஜி தாக்குர், சுஷீல் குமார் சிங், சேடி பாஸ்வான், ஐக்கிய ஜனதா தளத்தின் கவிதா சிங், கிரிதாரி யாதவ் ஆகிய எம்.பி.க்கள் பட்டமேற்படிப்பு படித்துள்ளனர். 
5 எம்எல்ஏ, 3 எம்எல்சி: பிகாரில் இருந்து 5 எம்எல்ஏக்கள், 3 எம்எல்சிக்கள் தற்போது மக்களவைக்கு தேர்வாகியுள்ளனர். 
ஐக்கிய ஜனதா தளத்தின் சட்ட மேலவை உறுப்பினர்களான ராஜீவ் ரஞ்சன் சிங் லாலன் மற்றும் சந்தேஷ்வர் பிரசாத் சந்திரவன்ஷி, லோக் ஜனசக்தியின் சட்டமேலவை உறுப்பினர் பசுபதி குமார் பராஸ் ஆகியோர் தற்போது எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் ராஜீவ் ரஞ்சன் மற்றும் பசுபதி குமார் ஆகியோர் மாநில அமைச்சர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
அதேபோல், தற்போது எம்.பி.க்களாக மக்களவைக்கு செல்லும் தினேஷ் சந்திர யாதவ், கவிதா சிங், கிரிதாரி யாதவ், அஜய் மண்டல் ஆகியோர் ஐக்கிய ஜனதா தளத்தின் எம்எல்ஏக்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்கள் தவிர, காங்கிரஸ் எம்.பி.யாக தேர்வாகியிருக்கும் முகமது ஜாவிதும் ஒரு எம்எல்ஏ ஆவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com