சுடச்சுட

  

  பாஜகவில் இணைந்த 2 திரிணமூல் எம்எல்ஏ-க்கள், 50 கவுன்சிலர்கள்: அன்றே எச்சரித்த மோடி

  By DIN  |   Published on : 28th May 2019 05:21 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Narendra_Modi_PTI12


  திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 எம்எல்ஏ-க்கள், 50 கவுன்சிலர்கள் இன்று (செவ்வாய்கிழமை) பாஜகவில் இணைந்தனர். 

  நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சி அமைக்கிறது. குறிப்பாக, கம்யூனிஸ்ட் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்து வந்த மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக 42 இடங்களில் 18 இடங்களில் வெற்றி பெற்று அம்மாநிலத்தில் கால் பதித்துள்ளது. 

  இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் 2 சட்டப்பேரவை உறுப்பினர்கள், 50 கவுன்சிலர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் என ஒரு பெரும் படையே இன்று பாஜகவில் இணைந்துள்ளது.

  பாஜக தலைவர் முகுல் ராய் மகன் சுப்ரங்சு ராய் திரிணமூல் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ஆவார். இவர், கடந்த 25-ஆம் தேதி திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில், அவர் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். 

  இந்த இணைப்பு நிகழ்ச்சி தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் நடைபெற்றது. இதுகுறித்து பாஜக தேசியச் செயலர் கைலாஷ் விஜய்வார்கியா தெரிவிக்கையில், 

  "மேற்கு வங்கத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அதுபோல் பாஜகவில் இணையும் நிகழ்வுகளும் 7 கட்டங்களாக நடைபெறும். இன்று வெறும் முதல் கட்டம் தான்" என்றார். 

  அன்றே எச்சரித்த மோடி:

  நரேந்திர மோடி கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "உங்களுடைய (மம்தா பானர்ஜி) எம்எல்ஏ-க்கள் 40 பேர் என்னுடன் தொடர்பில் உள்ளனர். மே 23-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, அந்த எம்எல்ஏ-க்கள் அனைவரும் உங்களைவிட்டு விலகி பாஜகவில் இணைவார்கள். தாமரை அனைத்து இடங்களிலும் மலரும்" என்று பேசியிருந்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai