ஜூன் 6-இல் பதினேழாவது மக்களவையின் முதல் கூட்டம்?

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 17-ஆவது மக்களவையின் முதல் கூட்டம் ஜூன் 6-ஆம் தேதி தொடங்கி 15-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜூன் 6-இல் பதினேழாவது மக்களவையின் முதல் கூட்டம்?


புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 17-ஆவது மக்களவையின் முதல் கூட்டம் ஜூன் 6-ஆம் தேதி தொடங்கி 15-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை விட அதிக தொகுதிகளை பாஜக கைப்பற்றியுள்ளது. இதையடுத்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆட்சியமைக்க வருமாறு குடியரசுத் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். 
வரும் வியாழக்கிழமை குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடிக்கு பதவிப் பிரமாணத்தையும், ரகசியக் காப்புப் பிரமாணத்தையும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செய்துவைக்க உள்ளார். இதையடுத்து, மத்திய அமைச்சரவைக்கும் குடியரசுத் தலைவர் பதவிப் பிரமாணம் செய்துவைக்க உள்ளார்.
இந்நிலையில், மத்திய அமைச்சர்களின் கூட்டம் வரும் 31-ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும், அதில் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறும் நாள் குறித்து முடிவுசெய்யப்பட உள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக, அதிகாரிகள் சிலர் கூறியதாவது:
புதிய மக்களவையின் முதல் கூட்டம் ஜூன் 6-ஆம் தேதி தொடங்கி ஜூன் 15-ஆம் தேதி வரை நடைபெற வாய்ப்புள்ளது. முதல் நாளில், நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்ற உள்ளார். அதையடுத்து, மக்களவையின் இடைக்காலத் தலைவரைக் குடியரசுத் தலைவர் நியமிப்பார். பின்னர், புதிய மக்களவை உறுப்பினர்களுக்கு இடைக்காலத் தலைவர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.
மக்களவையின் புதிய தலைவர் வரும் ஜூன் மாதம் 10-ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி உரையாற்றுவார். 
மாநிலங்களவையிலும் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். 
காலாவதியான மசோதாக்கள்: கடந்த 2014-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 16-ஆவது மக்களவை கலைக்கப்பட்டதன் மூலம், மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, முத்தலாக் தடை மசோதா ஆகியவை காலாவதியாகியுள்ளன.
சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, முத்தலாக் தடை மசோதா ஆகியவற்றை முந்தைய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மக்களவையில் நிறைவேற்றியது. இதைத் தொடர்ந்து, மாநிலங்களவையின் ஒப்புதலைப் பெறுவதற்காக அந்த மசோதாக்கள் அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால், மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாமல் அவை நிலுவையில் இருந்தன. 
தற்போது 17-ஆவது மக்களவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், 16-ஆவது மக்களவையைக் கலைத்து குடியரசுத் தலைவர் கடந்த சனிக்கிழமை உத்தரவிட்டார். இதையடுத்து, நிலுவையில் இருந்த மசோதாக்களும் காலாவதியாகின.  
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா: வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி வரை இந்தியாவுக்குக் குடிபெயர்ந்த ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள், பாரசீகர்கள், சமணர்கள், பெளத்தர்கள், சீக்கியர்கள் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை அளிக்க வகைசெய்யும் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்த மசோதாவுக்கு எதிராக அங்கு பல்வேறு தரப்பினர் சார்பில் போராட்டங்களும் நடத்தப்பட்டன.
முத்தலாக் தடை மசோதா: முஸ்லிம் பெண்களை உடனடியாக மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறையைச் சட்டப்படி தடை செய்யும் நோக்கில், முத்தலாக் தடை மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்தது. இந்த மசோதாவில் பல குறைபாடுகள் இருப்பதாகக் கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. எனினும், இந்த விவகாரம் தொடர்பாக, இரண்டு முறை அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டன.
தற்போது, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசே மீண்டும் ஆட்சியமைக்க இருப்பதால், இந்த விவகாரங்கள் தொடர்பாகப் புதிய மசோதாக்களை அந்த அரசு தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com