சுடச்சுட

  

  சிவகங்கை தொகுதியில் முழுக்கவனம் செலுத்துங்கள்: கார்த்தி சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை

  By DIN  |   Published on : 29th May 2019 11:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  karthic

   

  புது தில்லி: உங்களை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்த சிவகங்கை தொகுதியில் முழுக் கவனம் செலுத்துங்கள் என்று கார்த்தி சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

  மேலும், ஏற்கனவே பிணைத் தொகையாக செலுத்திய ரூ.10 கோடியை திருப்பிக் கொடுக்குமாறு கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

  அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள கார்த்தி சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

  வெளிநாடு செல்வதற்காக ரூ.10 கோடி பிணைத்தொகை செலுத்த வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

  ஏர்செல்-மேக்சிஸ், ஐஎன்எக்ஸ் மீடியா ஆகிய வழக்குகள் தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்நிலையில், ஸ்பெயின், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். 

  இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்ள சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆட்சேபம் எதுவும் தெரிவிக்கவில்லை. இதைத் தொடர்ந்து, அவர் வெளிநாடு பயணம் மேற்கொள்ள அனுமதி அளித்த நீதிபதிகள், உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தெரிவித்துள்ள நிபந்தனைகளின்படி, ரூ.10 கோடியைப் பிணைத்தொகையாகச் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

  இதையடுத்து, கார்த்தி சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கே.வி.விஸ்வநாதன், ஏற்கெனவே செலுத்திய ரூ.10 கோடி பிணைத்தொகை உச்சநீதிமன்றத்தின்வசமே உள்ளது என்றார்.

  இதைத் தொடர்ந்து நீதிபதிகள், மீண்டும் ஒருமுறை ரூ.10 கோடி பிணைத்தொகையைச் செலுத்துவதில், உங்களுக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது என நினைக்கிறோம் என்றனர்.

  இந்த நிலையில், ஏற்கனவே செலுத்திய ரூ.10 கோடி பிணைத் தொகையை திரும்ப அளிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்தார்.

  இந்த மனு இன்று உச்ச நீதிமன்ற விடுமுறைக் கால அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, மேலும் ரூ.10 கோடியை பிணைத் தொகையாக செலுத்தி, இந்த மாத இறுதி மற்றும் அடுத்த மாத முதல் வாரத்துக்குள் அனுமதிக்கப்பட்ட நாடுகளுக்கு சென்று வரலாம் என்றும், ஏற்கனவே செலுத்திய பிணைத்தொகையை தற்போது திருப்பி அளிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் மீண்டும் மனு தாக்கல் செய்ததால், அந்த மனுவை தள்ளுபடி செய்வதாகவும் கூறினார்.

  மேலும், உங்களைத் தேர்வு செய்த சிவகங்கை மக்களவைத் தொகுதியில் முழுக் கவனம் செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி ரஞ்சன் கோகோய் அறிவுரை வழங்கினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai