கர்தார்பூர் வழித்தடம் அமைப்பதில் சிக்கல்!: இந்தியா-பாகிஸ்தான் அதிகாரிகளிடையே உடன்பாடு எட்டப்படவில்லை

இந்தியா, பாகிஸ்தான் நாடுகளின் அதிகாரிகளுக்கிடையேயான பேச்சுவார்த்தையில் ஒருமித்த கருத்து எட்டப்படாத காரணத்தால், கர்தார்பூர் வழித்தடத்தை அமைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.


இந்தியா, பாகிஸ்தான் நாடுகளின் அதிகாரிகளுக்கிடையேயான பேச்சுவார்த்தையில் ஒருமித்த கருத்து எட்டப்படாத காரணத்தால், கர்தார்பூர் வழித்தடத்தை அமைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
கர்தார்பூர் வழித்தடத் திட்டத்தின் செயலாக்கம் தொடர்பாக இந்தியா, பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் கடந்த திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினர்.
கர்தார்பூர் ஜீரோ பாய்ண்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை, மத்திய உள்துறை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆகியவற்றின் அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கூட்டம் ஒரு மணிநேரம் மட்டுமே நடைபெற்றதாகவும், இதில் வழித்தட கட்டுமானம் குறித்து எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக, பாகிஸ்தானின் எக்ஸ்பிரஸ் டிரிபியூன் நாளிதழில் வெளியாகியுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
சீக்கியர்கள் எளிதில் பயணம் மேற்கொள்ள ராவி நதியின் மேல் பாலம் கட்டுவதற்கு இந்திய அதிகாரிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. பாலம் கட்டுவதற்குப் பதிலாக சாலை அமைக்க பாகிஸ்தான் அதிகாரிகள் வலியுறுத்தினர். ஆனால், ராவி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், சாலை வழியாகப் பயணம் செய்வது எளிதாக இருக்காது எனக் கூறி பாகிஸ்தான் அதிகாரிகளின் கோரிக்கைகளுக்கு இந்திய அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருப்பினும், தடுப்பணை போன்றதொரு அமைப்பை ஏற்படுத்தி, வெள்ளத்தால் பாதிக்கப்படாத வண்ணம் சற்று உயரத்தில் சாலையை அமைக்கலாம் என்று பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர். முடிவில், இது தொடர்பாக இருநாட்டு அதிகாரிகளுக்குமிடையே ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ள தேதி குறித்தும் இருநாட்டு அதிகாரிகள் முடிவு செய்யவில்லை என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குரு நானக் தேவ் நினைவாக பாகிஸ்தானின் கர்தார்பூரில் எழுப்பப்பட்ட தர்பார் சாஹிப் குருத்வாரா, சர்வதேச எல்லைப் பகுதியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் ராவி நதிக்கரையில் அமைந்துள்ளது.
அந்த குருத்வாராவுக்கு இந்தியாவில் உள்ள சீக்கியர்கள் நுழைவுஇசைவு (விசா) இன்றி புனிதப்பயணம் மேற்கொள்ள வசதியாக, இந்தியாவின் குருதாஸ்பூரையும், கர்தார்பூரையும் இணைக்கும் வகையிலான வழித்தடத்துக்கு கடந்த ஆண்டு இந்தியப் பகுதியிலும், பாகிஸ்தான் பகுதியிலும் தனித்தனியே அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த வழித்தடத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தையில் இந்தியா, பாகிஸ்தான் அதிகாரிகள் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது அதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com