மக்களவை காங்கிரஸ் எம்.பி.க்கள் குழு தலைவராக செயல்படத் தயார்

மக்களவை காங்கிரஸ் எம்.பி.க்கள் குழுத் தலைவராக செயல்பட தயாராக இருப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசிதரூர் தெரிவித்தார்.
மக்களவை காங்கிரஸ் எம்.பி.க்கள் குழு தலைவராக செயல்படத் தயார்


மக்களவை காங்கிரஸ் எம்.பி.க்கள் குழுத் தலைவராக செயல்பட தயாராக இருப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசிதரூர் தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட்டு சசிதரூர் வெற்றி பெற்றார். இந்நிலையில், தில்லியில் பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சிக்கு காந்தி-நேரு குடும்பம் மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளது. குறிப்பாக, நாடு சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியை வடிவமைத்ததிலும், கட்சியை வழிநடத்துவதிலும் காந்தி-நேரு குடும்பத்தினர் முக்கிய பங்கு வகித்துள்ளனர். இந்த பங்களிப்புகளை அடிப்படையாகக் கொண்டு, கட்சிக்கு அக்குடும்பத்தினர் தொடர்ந்து தலைமை வகிப்பார்கள்.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் அடைந்த தோல்விக்கு கட்சித் தலைவர் ராகுல் காந்தியை மட்டும் ஊடகங்கள் குற்றம்சுமத்துவது சரியில்லை. தேர்தல் தோல்விக்கு ராகுல் காந்தி துணிச்சலாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். அதேபோல், தேர்தலில் நிகழ்ந்த தவறுக்கு, கட்சியின் பிற தலைவர்களும் பொறுப்பாவர்.  கட்சியை மீட்டெடுக்கும் பொறுப்பும், கட்சித் தலைவர்களுக்கு உள்ளது.
கட்சித் தலைவர் பதவிக்கு நாளைக்கே தேர்தல் நடத்தப்பட்டாலும், அத்தேர்தலில் பிற வேட்பாளர்கள் யாரேனும் போட்டியிட்டால், அவர்களை ராகுல் காந்தி எளிதில் தோல்வியடைய செய்வார். அந்தளவுக்கு காங்கிரஸ் கட்சியினர் மனதில் ராகுல் காந்தி அழுத்தமாக இடம்பிடித்துள்ளார். என்னைப் பொறுத்தவரையில், கட்சியை முன்னெடுத்துச் செல்ல உதவி செய்வதிலும் ராகுல் காந்திதான் சிறந்த நபராவார்.
காந்தி குடும்பத்தினர் அல்லாத நபர், கட்சிக்கு தலைமை வகிப்பது குறித்து கேட்கிறீர்கள். 
பிற தலைவர்களும் காங்கிரஸ் கட்சியில் முக்கிய பதவிகளை வகித்துள்ளனர். இதற்கு உதாரணமாக, நாட்டின் பிரதமராக காங்கிரஸ் கட்சி சார்பில் கடைசியாக தேர்வு செய்யப்பட்ட 2 பேரும், காந்தி குடும்பத்தினர் இல்லை என்பதை தெரிவிக்கலாம். இந்த நாட்டுக்காக முன்னாள் பிரதமர்களான இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் தங்களது உயிரையே தியாகம் செய்துள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் தோல்வியடைந்து விட்டனர். ஆதலால், மக்களவைக்கான காங்கிரஸ் குழுத் தலைவராக செயல்படும் வாய்ப்பை எனக்கு கட்சி அளித்தால், அதை ஏற்கத் தயாராக இருக்கிறேன் என்றார் சசிதரூர்.
பாஜகவுக்கு காங்கிரஸ் கட்சியை மாற்றாக கருதுகிறீர்களா? எனக் கேட்கப்பட்டது. அதற்கு சசிதரூர் பதிலளிக்கையில், கேரளம், பஞ்சாபில் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. இதனால் கட்சி அழிந்து விட்டதாக தெரிவிக்க இயலாது. அடுத்தடுத்து 4 முதல் 5 மாதங்களில், பல்வேறு மாநிலத் தேர்தல்கள் வருகின்றன. ஆதலால் காயத்துக்கு மருந்து போட்டுக் கொண்டிருக்காமல், விரைந்து அத்தேர்தலுக்கு கட்சி தயாராக வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com