மோடி அமைச்சரவை இன்று பதவியேற்பு: குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரமாண்ட ஏற்பாடு

நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி இரண்டாவது முறையாக வியாழக்கிழமை பதவியேற்க இருக்கிறார். அவருடன் மத்திய அமைச்சர்களும் பதவியேற்க இருக்கின்றனர்.
மோடி அமைச்சரவை இன்று பதவியேற்பு: குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரமாண்ட ஏற்பாடு

 
* கூட்டணிக் கட்சிகளுக்கும் அமைச்சர் பதவி
நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி இரண்டாவது முறையாக வியாழக்கிழமை பதவியேற்க இருக்கிறார். அவருடன் மத்திய அமைச்சர்களும் பதவியேற்க இருக்கின்றனர். தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இரவு 7 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைக்க இருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, வெளிநாட்டுத் தலைவர்கள், உள்நாட்டு அரசியல் தலைவர்கள், மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், முன்னாள் முதல்வர்கள், வெளிநாட்டுத் தூதர்கள், பல்துறை வல்லுநர்கள், திரைப்படத் துறை பிரபலங்கள் என பலர் பங்கேற்கின்றனர். இரவு 7 மணி முதல் 8.30 மணிவரை பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகை சார்பில் இரவு விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர்கள்: கடந்த அமைச்சரவையில் இடம்பெற்ற மூத்த அமைச்சர்களான ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், ரவி சங்கர் பிரசாத், பியூஷ் கோயல், நரேந்திர சிங் தோமர், பிரகாஷ் ஜாவடேகர் ஆகியோர் மீண்டும் அமைச்சரவையில் இடம் பெறுவார்கள் என்று தெரிகிறது. பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு அமைச்சரவையில் முக்கியப் பொறுப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடியுடன் 65 பேர் வரை அமைச்சர்களாகப் பதவியேற்பார்கள் என்று தெரிகிறது.
மோடி-அமித் ஷா ஆலோசனை: மத்திய அமைச்சர்கள் பட்டியலை இறுதி செய்வது குறித்து பிரதமர் மோடியும், அமித் ஷாவும் கடந்த இருநாள்களாக தீவிர ஆலோசனை நடத்தினர். பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை புதன்கிழமை 5 மணி நேரம் வரை நீடித்தது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.
சர்வதேச அளவில் அடுத்த 5 ஆண்டுகள் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது என்று பிரதமர் மோடி ஏற்கெனவே தெரிவித்துள்ளார். எனவே, இந்தியாவை பொருளாதாரரீதியாக முழுவீச்சில் முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் அமைச்சர்கள் தேர்வு இருக்கும் என்று கருதப்படுகிறது. இதுதவிர உள்நாட்டில் மேற்கு வங்கம், ஒடிஸா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் கட்சியை முழுமையாக வலுப்படுத்தும் நோக்கில் பாஜக செயல்பட்டு வருகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டும் அமைச்சர்கள் தேர்வு அமையும்.
கூட்டணிக் கட்சிகளுக்கு... பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ள நிலையிலும், கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் 10 இடங்கள் ஒதுக்கப்படும் என்று தெரியவந்துள்ளது. தமிழகத்தில் பாஜகவின் முக்கியக் கூட்டணிக் கட்சியான அதிமுகவுக்கும் அமைச்சரவையில் ஓரிடம் ஒதுக்கப்படும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தவிர சிவசேனை, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி உள்ளிட்ட பாஜகவின் கூட்டணிக் கட்சிகளுக்கும் மத்திய அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட இருக்கிறது.
சிவசேனை, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு கேபினட் அமைச்சர், ஒரு இணையமைச்சர் பொறுப்பு வழங்கப்படும். லோக் ஜனசக்தி, சிரோமணி அகாலி தளம் ஆகிய கட்சிகளுக்கு தலா ஓரிடம் அளிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது. லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான், சிரோமணி அகாலி தளம் சார்பில் ஹர்சிம்ரத் கெளர் பாதல் ஆகியோர் மீண்டும் அமைச்சரவையில் இடம் பெறுவார்கள் என்று தெரிகிறது.
சோனியா, ராகுல் பங்கேற்பர்: ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் உள்பட பலர் பங்கேற்கின்றனர்.
முதலில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதாகக் கூறிய மம்தா, பின்னர் மேற்கு வங்கத்தில் அரசியல் வன்முறைகளில் 54 பாஜகவினர் கொலை செய்யப்பட்டதாக அக்கட்சியினர் குற்றம்சாட்டியதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நிகழ்ச்சியில் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்துவிட்டார். 
மேற்கு வங்கத்தில் அரசியல் வன்முறைகளால் கொல்லப்பட்ட 54 பாஜக தொண்டர்களின் குடும்பத்தினரும் பதவியேற்பு விழாவில் பங்கேற்கின்றனர். 

இம்ரானுக்கு அழைப்பில்லை
பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
கடந்த 2014-இல் முதல் முறையாக பிரதமராக மோடி பதவியேற்றபோது, சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பாகிஸ்தானின் அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப், மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றார். இருப்பினும், கடந்த 2016-இல் பதான்கோட் பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர், இரு தரப்பு உறவு பின்னடைவைச் சந்தித்தது.
பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் கடந்த ஆண்டு பதவியேற்ற நிலையில், கடந்த பிப்ரவரியில் நிகழ்ந்த புல்வாமா பயங்கரவாத தாக்குதல் மற்றும் பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் இந்திய விமானப் படை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை ஆகிய சம்பவங்கள், இரு நாடுகளிடையே பதற்றத்தை அதிகப்படுத்தின.
இந்தச் சூழலில், இந்தியாவின் பிரதமராக மீண்டும் தேர்வான பிரதமர் மோடியை, தொலைபேசியில் தொடர்புகொண்டு இம்ரான் கான் வாழ்த்து தெரிவித்தார். அப்போது, நமது பிராந்தியத்தில் அமைதியை உறுதி செய்வதற்கு, பயங்கரவாதம் இல்லாத சூழலை உருவாக்க வேண்டும் என்று இம்ரானிடம் மோடி வலியுறுத்தினார். 
இந்நிலையில், மோடியின் பதவி
யேற்பு விழாவில் பங்கேற்க இம்ரான் கானுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
கடந்த முறைபோல இந்த முறையும் குடியரசுத் தலைவர் மாளிகையின் வெளிமுற்றத்தில் வைத்து பதவியேற்பு விழா நடைபெற இருக்கிறது. இதற்காக தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
பெரும்பாலும் குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள தர்பார் மண்டபத்தில்தான் பதவியேற்பு விழா நடைபெறும். எனினும், அதிக அளவில் விருந்தினர்கள் பங்கேற்பதால் கடந்தமுறையைப் போல இப்போதும் வெளிமுற்றம் தேர்வு செய்யப்பட்டது. இந்த முறை 8,000-க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது. 
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் இவ்வளவு அதிகமானோர் பங்கேற்பது இதுவே முதல் முறை. மேலும், பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் இவ்வளவு அதிகமானோர் பங்கேற்பதும் இதுவே முதல்முறை. 
கடந்த முறை பதவியேற்பு நிகழ்ச்சியில் சுமார் 5,000 பேர் பங்கேற்றனர். இதற்கு முன் முன்னாள் பிரதமர்கள் சந்திரசேகர், வாஜ்பாய் ஆகியோர் குடியரசுத் தலைவர் மாளிகையின் வெளிமுற்றத்தில் பதவியேற்றுள்ளனர்.

வெளிநாட்டுத் தலைவர்கள்
வங்காள விரிகுடா நாடுகளின் பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பின் (பிம்ஸ்டெக்) தலைவர்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். இக்கூட்டமைப்பில் வங்கதேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, நேபாளம், பூடான் ஆகிய நாடுகள் உள்ளன. 
மோரீஷஸ் பிரதமர் பிரவிந்த் குமார் தாய்லாந்து சார்பில் சிறப்புத் தூதர் கிரிசாடா பூன்ராச், மியான்மர் அதிபர் யூ வின் மையின்ட், கிர்கிஸ்தான் அதிபர் ஜீன்பிக்கோவ், பூடான் பிரதமர் லோட்டே ஸ்ரிங், வங்கதேச அதிபர் அப்துல் ஹமீது, இலங்கை அதிபர் சிறீசேனா, நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி ஆகியோர் பங்கேற்கின்றனர். வெளிநாட்டுப் பயணத்தில் இருப்பதால் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பங்கேற்கவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com