லண்டனில் சொத்துகள் வாங்கப்பட்ட விவகாரம்: வதேரா இன்று ஆஜராக அமலாக்கத் துறை சம்மன்

பிரிட்டன் தலைநகர் லண்டனில் சொத்துகள் வாங்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைக்காக வியாழக்கிழமை (மே 30) நேரில் ஆஜராகக் கோரி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின்
லண்டனில் சொத்துகள் வாங்கப்பட்ட விவகாரம்: வதேரா இன்று ஆஜராக அமலாக்கத் துறை சம்மன்


பிரிட்டன் தலைநகர் லண்டனில் சொத்துகள் வாங்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைக்காக வியாழக்கிழமை (மே 30) நேரில் ஆஜராகக் கோரி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத் துறை மீண்டும் அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது.
இதுகுறித்து அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறுகையில், தில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணை அதிகாரி முன்பு வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராகுமாறு ராபர்ட் வதேராவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்றன.
லண்டனில் பல கோடி ரூபாய் மதிப்புடைய  வீடுகள் உள்ளிட்ட சொத்துகள் வாங்கியது தொடர்பாக ராபர்ட் வதேரா, அவரது உதவியாளர் மனோஜ் அரோரா ஆகியோருக்கு எதிராக  சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. 
இந்த வழக்கில் ராபர்ட் வதேரா, அரோரா ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முன்ஜாமீன் அளித்தது. அப்போது விசாரணைக்கு ராபர்ட் வதேரா ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், நீதிமன்றத்தின் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு செல்லக் கூடாது என்பது போன்ற நிபந்தனைகளை ராபர்ட் வதேரா, அரோரா ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்தது.
இந்நிலையில்  ராபர்ட் வதேரா, அரோரா ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றத்தால் முன்ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து  தில்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை கடந்த வாரம் மனு தாக்கல் செய்தது.
இந்த மனு, தில்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சந்தர் சேகர் முன்பு கடந்த திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரும் அமலாக்கத் துறை மனு குறித்து பதிலளிக்க ராபர்ட் வதேரா, அரோரா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி சந்தர் சேகர் உத்தரவிட்டார்.
இந்நிலையில், தில்லியில் விசாரணை அதிகாரி முன்பு நேரில் ஆஜராக ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. முன்னதாக, இந்த வழக்கில் ராபர்ட் வதேராவிடம் ஏற்கெனவே பலமுறை அமலாக்கத் துறை விசாரணை நடத்தியுள்ளது.
வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு மனு
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா, வெளிநாடு செல்ல அனுமதி கோரி, தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
பிரிட்டன் உள்ளிட்ட 3 நாடுகளில் சுற்றுப்பயணம் செல்ல அனுமதிகோரி, தில்லி நீதிமன்றத்தில் ராபர்ட் வதேரா மனு தாக்கல் செய்துள்ளார். தனது உடல்நிலையை சுட்டிக்காட்டியும், அதுதொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்தும் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு, தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அரவிந்த் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ராபர்ட் வதேரா மீதான குற்றச்சாட்டுகள் மிகத்தீவிரமானவை, ஆதலால் வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்புள்ளது. எனவே அவருக்கு வெளிநாடு செல்ல அனுமதி தரக்கூடாது என்று அமலாக்கத் துறை தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, ராபர்ட் வதேரா மனு மீதான உத்தரவை ஜுன் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com