தேர்தல் தோல்வி எதிரொலி: தில்லி காங்கிரஸில் மாற்றமா?

நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் தில்லியில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வி குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஐவர் குழுவின் அறிக்கையின்
தேர்தல் தோல்வி எதிரொலி: தில்லி காங்கிரஸில் மாற்றமா?

நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் தில்லியில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வி குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஐவர் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட, வட்டாரப் பகுதி நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மக்களவைத் தேர்தலில் தில்லியில் உள்ள ஏழு தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தோல்வியைச் சந்தித்தது. மூன்று முறை முதல்வராக இருந்த ஷீலா தீட்சித், தில்லி காங்கிரஸ் தலைவராகவும் மத்திய அமைச்சராகவும் இருந்த அஜய் மாக்கன் ஆகியோரும் தோல்வியைத் தழுவினர்.  தில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரியிடம் ஷீலா தீட்சித் 3.66 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 

இதையடுத்து, மக்களவைத் தேர்தல் தோல்விக்கான காரணத்தை ஆராய பர்வேஷ் ஹஸ்மி, ஏகே வாலியா, யோகாநந்த் சாஸ்திரி, பவன் கேஹரா, ஜெய்கிஷான் ஆகியோரைக் கொண்ட ஐவர் குழுவை தில்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித் கடந்த 27ஆம் தேதி நியமித்தார்.  10 நாளில் இந்தக் குழு அறிக்கை தாக்கல் செய்யவும் அவர் உத்தரவிட்டிருந்தார். இந்தக் குழுவினர் தில்லியின் ஏழு மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், வேட்பாளர்கள், நிர்வாகிகள் ஆகியோரிடம் தோல்விக்கான காரணங்களைக் கேட்டறிந்து வருகின்றனர்.

இதுகுறித்து அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினரும், தில்லியின் முன்னாள் அமைச்சருமான யோகாநந்த் சாஸ்திரி வியாழக்கிழமை கூறுகையில், "தில்லியின் 7 மாவட்டத் தலைவர்களிடமும், இரண்டு வேட்பாளர்களிடமும் இதுவரை கருத்துகளைக் கேட்டறிந்துள்ளோம். மீண்டும் சனிக்கிழமை குழு கூடி, மீதமுள்ள 5 வேட்பாளர்களிடம் கருத்துகளைக் கேட்டறிய உள்ளோம். எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக கட்சியைப் பலப்படுத்தும் பல்வேறு முக்கிய யோசனைகளை வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் நிர்வாகிகள் அளித்தனர். 

வட்டாரப் பகுதி தலைவர்களையும் எங்கள் குழுவினர் சந்தித்து கருத்துக் கேட்ட பிறகு தில்லி காங்கிரஸ் தலைவரிடம் விரைவில் அறிக்கையை சமர்ப்பிப்போம். தேர்தல் தோல்விக்கு காரணமான தில்லி காங்கிரஸின் மூத்த தலைவர்கள், மாவட்டத் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். ஷீலா தீட்சித்தின் இந்த நடவடிக்கைக்கு தில்லி காங்கிரஸின் மூத்த தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

"தேர்தல் தொடர்புடைய விவகாரங்கள் தில்லி காங்கிரஸின் மேலிடப் பொறுப்பாளரின் கட்டுப்பாட்டின் கீழ்தான் வரும். ஆனால், இதுபோன்ற குழு அமைத்ததே அவருக்கு தெரியவில்லை. இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள ஒரு சில உறுப்பினர்களின் தேர்தல் செயல்பாடுகளே கேள்விக்குறியாக உள்ளது' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com