மணிப்பூரில் 12 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சிப் பதவிகளில் இருந்து விலகல்

மணிப்பூர் மாநிலத்தில் 12 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், கட்சிப் பதவிகளில் இருந்து விலகியுள்ளனர். இதனால் அவர்கள், அந்த மாநிலத்தை ஆளும் பாஜகவில் விரைவில் சேரலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.


மணிப்பூர் மாநிலத்தில் 12 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், கட்சிப் பதவிகளில் இருந்து விலகியுள்ளனர். இதனால் அவர்கள், அந்த மாநிலத்தை ஆளும் பாஜகவில் விரைவில் சேரலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனினும் இதை அவர்கள் மறுத்துள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் மணிப்பூரில் உள்ள 2 தொகுதிகளில் ஒன்றை பாஜகவும், இன்னொரு தொகுதியை நாகா மக்கள் முன்னணி கட்சியும் கைப்பற்றின. காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.
இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கான மணிப்பூர் மாநில தலைவர் காய்காங்கம்மை சந்தித்து அக்கட்சியின் 12 எம்எல்ஏக்கள், கட்சி பதவிகளில் இருந்து விலகுவது தொடர்பான கடிதத்தை அளித்தனர்.
இதில் மூத்த எம்எல்ஏவான ஜோகிஷண் சிங், பிடிஐ செய்தியாளரிடம் கூறுகையில், எங்களது சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாழும் மக்கள் மத்தியில் காங்கிரஸ் மீது நம்பிக்கையை ஏற்படுத்தவே கட்சிப் பதவிகளை ராஜிநாமா செய்துள்ளோம். 12 எம்எல்ஏக்களும் காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து இருப்பார்கள் என்றார். 
மணிப்பூர் காங்கிரஸ் தலைவர் காய்காங்கம் கூறுகையில், அமைப்பு ரீதியில் கட்சியை வலுப்படுத்தும் பணியில் 12 எம்எல்ஏக்களும் இனிமேல் ஈடுபடுவார்கள் என்றார். 
12 எம்எல்ஏக்களும் கட்சிப் பதவிகளில் இருந்து விலகியிருப்பதை கட்சி ஏற்றுக் கொண்டதா? எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவர், கட்சியின் தேசியத் தலைவர் ராகுல் காந்தி இறுதி முடிவெடுப்பார் என்றார்.
மணிப்பூர் சட்டப்பேரவைக்கு 2017ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 29 இடங்களில் வென்றது. 
எனினும், 8 எம்எல்ஏக்கள் பாஜகவில் கடந்த ஆண்டு சேர்ந்தனர். இதனால் பாஜகவின் பலம் 21இல் இருந்து 29ஆக உயர்ந்தது. இதுதவிர்த்து, பாஜகவுக்கு லோக் ஜனசக்தி கட்சி, ஏஐடிசி கட்சியின் எம்எல்ஏக்கள் 2 பேரும், சுயேச்சை எம்எல்ஏ ஒருவரும், தேசிய மக்கள் கட்சி எம்எல்ஏக்கள் 4 பேரும் ஆதரவு அளித்தனர். 
இதேபோல் நாகா மக்கள் முன்னணியும் பாஜகவுக்கு ஆதரவு அளித்தது. இதனால் மணிப்பூரில் பாஜக கூட்டணி ஆட்சியமைத்தது. மாநில முதல்வராக பாஜக மூத்த தலைவர் என். பிரேன் சிங் உள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com