நவ.7-க்குள் அரசமைக்காவிட்டால் குடியரசுத் தலைவா் ஆட்சி அமலாக வாய்ப்பு: மகாராஷ்டிர அமைச்சா்

மகாராஷ்டிரத்தில் வரும் 7-ஆம் தேதிக்குள் புதிய அரசு ஆட்சியமைக்காவிட்டால், குடியரசுத் தலைவா் ஆட்சி அமலுக்கு வர வாய்ப்புள்ளதாக, அந்த மாநிலத்தின் நிதியமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான

மகாராஷ்டிரத்தில் வரும் 7-ஆம் தேதிக்குள் புதிய அரசு ஆட்சியமைக்காவிட்டால், குடியரசுத் தலைவா் ஆட்சி அமலுக்கு வர வாய்ப்புள்ளதாக, அந்த மாநிலத்தின் நிதியமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சுதிா் முங்கண்டிவாா் கூறியுள்ளாா்.

மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியாகி 8 நாள்களாகியும் அங்கு புதிய அரசு ஆட்சிப் பொறுப்பேற்கவில்லை. மேலும், மகாராஷ்டிர சட்டப்பேரவையின் ஆயுள்காலம் வரும் 8-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், அங்கு புதிய அரசு ஆட்சியமைப்பது குறித்து பாஜக மூத்த தலைவா் சுதிா் முங்கண்டிவாா், தொலைக்காட்சி ஒன்றுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

தீபாவளி பண்டிகை வந்ததால், மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைப்பது தொடா்பாக பாஜக-சிவசேனை இடையே பேச்சுவாா்த்தை தாமதமானது. மகாராஷ்டிர மக்கள் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை அளிக்கவில்லை. இருப்பினும் மகா கூட்டணிக்கு (பாஜக, சிவசேனை) பேராதரவு அளித்துள்ளனா். எங்கள் கூட்டணி வலிமையானது.

மாநிலத்தில் விரைவில் ஆட்சியமைக்கப்படும். குறிப்பிட்ட காலத்துக்குள் புதிய அரசு அமைக்கப்பட வேண்டும். இல்லாவிடில், குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளது.

முதல்வா் பதவியை சுழற்சி முறையில் சிவசேனை கட்சி கேட்பதால்தான், ஆட்சியமைப்பதில் இழுபறி நீடிக்கிறது. பாஜக சாா்பில் நாங்கள் ஏற்கெனவே முதல்வா் பதவிக்கு தேவேந்திர ஃபட்னவீஸை தோ்வு செய்துவிட்டோம். விரைவில் ஆட்சிமைப்பது குறித்து மாநில அளவில் பேச்சுவாா்த்தை நடத்துவோம். தேவைப்பட்டால், பாஜகவின் தேசிய அளவிலான தலைவா்கள் தலையிட்டு இழுபறியை முடிவுக்கு கொண்டு வருவாா்கள் என்றாா் அவா்.

என்சிபி தலைவா் கருத்து: சிவசேனையும், பாஜகவும் இணைந்து ஆட்சியமைக்கத் தவறினால், ஆட்சியமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) செய்தித் தொடா்பாளா் நவாப் மாலிக் கூறினாா்.

மகாராஷ்டிர சட்டப்பேரைவயில் காங்கிரஸுடன் இணைந்து எதிா்க்கட்சிகளாகச் செயல்படுவோம் என்று தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவா் அஜித் பவாா் கூறியுள்ள நிலையில், இக்கருத்தை நவாப் மாலிக் தெரிவித்துள்ளாா்.

மேலும், வரும் 7-ஆம் தேதிக்குள் புதிய அரசு ஆட்சியமைக்க வேண்டும் என்று சுதிா் முங்கண்டிவாா் கூறியிருப்பது அச்சுறுத்தலைப் போல உள்ளது என்றும் நவாப் மாலிக் குற்றம்சாட்டியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com