சரத் பவார் உடனான சந்திப்பு: சிவசேனை கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் விளக்கம்

சிவசேனை மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ரௌத், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரை சனிக்கிழமை சந்தித்துப் பேசினார். 
சரத் பவார் உடனான சந்திப்பு: சிவசேனை கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் விளக்கம்

மகாராஷ்டிரத்தில் பாஜக-சிவசேனை கூட்டணி வெற்றி பெற்றாலும், முதல்வா் பதவியை தங்களுக்கு இரண்டரை ஆண்டுகள் தர வேண்டுமென்ற சிவசேனையின் வலியுறுத்தலால், ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது. 44 எம்எல்ஏக்களைக் கொண்ட காங்கிரஸ், 54 எம்எல்ஏக்களைக் கொண்ட தேசியவாத காங்கிரஸ் ஆகியோருடன் இணைந்து 56 எம்எல்ஏக்களைப் பெற்றுள்ள சிவசேனை, ஆட்சி அமைப்பது தொடர்பாக பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், சிவசேனை மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ரௌத், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரை சனிக்கிழமை சந்தித்துப் பேசினார். இதுதொடர்பாக அவர்  கூறுகையில், 

மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைக்க தாமதப்படுத்தினால் ஆளுநர் ஆட்சி அமைக்கப்படும் என பாஜக-வைச் சேர்ந்த அமைச்சர் கூறியுள்ளது, தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ-க்கள் மீதான மிரட்டலாகும். தற்போது மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னை காரணமாக அனைத்து கட்சிகளும் பரஸ்பரம் சந்தித்துப் பேசி வருகின்றன. அவ்வகையில் தான் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் சிவ சேனை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இதில் பேச்சுவார்த்தை நடத்தாத இரு கட்சிகள் என்றால் அது சிவ சேனையும், பாஜகவும் தான் என்று தெரிவித்தார்.

முன்னதாக, சிவசேனை கட்சியைச் சோ்ந்தவரே முதல்வராகப் பொறுப்பேற்பாா். மாநிலத்தில் ஆட்சி அதிகாரம் பாஜகவுக்கும், சிவசேனைக்கும் சரிசமமாகப் பிரித்து வழங்கப்படும் என்று மக்கள் முன்னிலையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதை நம்பியே மக்கள் வாக்களித்தனா்.

 பாஜகவால் தனித்து ஆட்சியமைக்க முடியாது. சிவசேனை நினைத்தால், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை எளிதில் பெற்றுவிடும் என்றாா் சஞ்சய் ரௌத் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com