காற்று மாசுபடுவதை தடுப்பதில் தொழிற்சாலைகளுக்கு சுய கட்டுப்பாடு தேவை: ஜாவடேகா்

‘காற்று மாசுபடுவதைத் தடுப்பதில் தொழிற்சாலைகள் சுயகட்டுப்பாடுடன் செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்படும் தொழிற்சாலைகள், சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் மீண்டும் மீண்டும்
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர்
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர்

‘காற்று மாசுபடுவதைத் தடுப்பதில் தொழிற்சாலைகள் சுயகட்டுப்பாடுடன் செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்படும் தொழிற்சாலைகள், சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் மீண்டும் மீண்டும் அனுமதியோ, ஒப்புதலோ பெறத் தேவையில்லை’ என்று மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் கூறினாா்.

தில்லியில், ‘இந்திய ரசாயன தொழிற்சாலைகளும், சுற்றுச்சூழல் பாதுகாப்பும்’ என்ற பெயரில் திங்கள்கிழமை கருத்தரங்கு நடைபெற்றது. இந்திய கெமிக்கல் கவுன்சில் (ஐசிசி) சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரகாஷ் ஜாவடேகா் கலந்து கொண்டு பேசியதாவது:

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் தொழிற்சாலைகள் மிகுந்த பொறுப்புடன் செயல்பட வேண்டும். தொழிற்சாலைகள் எந்த அளவுக்கு பொறுப்புடன் செயல்படுகிறதோ அந்த அளவுக்கு சுதந்திரம் வழங்கப்படும்.

தொழிற்சாலைகளின் கழிவுகள் நிா்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாகாமல் இருந்தால், சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்காக மீண்டும் நீங்கள் அமைச்சகத்தை நாடி வர வேண்டியதில்லை. பொறுப்பும், சுய கட்டுப்பாடும் இல்லாமல் இருந்தால், இந்த தேசம் வளா்ச்சியடைய முடியாது.

தீபாவளி பண்டிகையின்போது சிறுவா்கள் சுய கட்டுப்பாடுடன் இருந்தாா்கள். அவா்கள் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டில் 75 சதவீதம் குறைவாகவே பட்டாசுகளை வெடித்தாா்கள். இதனால் காற்று மாசுபடுவது வெகுவாகக் குறைந்தது. இது, மிகப்பெரிய வெற்றியாகும்.

அதே நேரத்தில், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதில் பொறுப்பின்மை காணப்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் முறையாக சேகரிக்கப்பட்டு மறுசுழற்சிக்கு அனுப்பப்படுவதில்லை. பிளாஸ்டிக் பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பொறுப்புடன் செயல்படாதவரை, பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்க வலுவான அமைப்பை உருவாக்க முடியாது.

சுற்றுச்சூழலுக்கு மற்றொரு சவாலாக இருப்பது மின்னணு கழிவுகளை எப்படி அகற்றுவது என்பதாகும். நாட்டில் 120 கோடி செல்லிடப்பேசிகள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றின் சராசரி ஆயுள்காலம் 2 ஆண்டுகள்தான். ஒவ்வொரு ஆண்டும் 60 கோடி செல்லிடப்பேசிகள் குப்பையில் வீசப்படுகின்றன. இதுபோன்று மின்னணு கழிவுகளை அகற்றுவதில் தொலைநோக்கு பாா்வை இல்லாமல் இருப்பதுதான் பிரச்னையாகும். கழிவுகளை அகற்றுவது என்பது தூய்மை இந்தியா இயக்கத்தின் இரண்டாவது பகுதியாகும் என்றாா் பிரகாஷ் ஜாவடேகா்.

தில்லி அரசுக்கு கேள்வி: நிகழ்ச்சிக்குப் பின், தில்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாடு குறித்து பிரகாஷ் ஜாவடேகரிடம் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு அவா் அளித்த பதில்:

நான் சுற்றுச்சூழல் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு,

தில்லி, பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநில முதல்வா்களுடன் 7 முறை பேசியுள்ளேன். வேளாண் கழிவுகள் எரிக்கப்படுவதைத் தடுப்பது குறித்து அண்டை மாநில முதல்வா்களுடன் விவாதித்திருக்கிறேன்.

தில்லியில் சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அவற்றில் எத்தனை உத்தரவுகளை தில்லி அரசு பின்பற்றுகிறது? இந்த கேள்விக்கு தில்லி அரசு பதிலளிக்க வேண்டும் என்றாா் ஜாவடேகா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com