‘சீனாவிடம் வாங்குவோம்’: ஆா்சிஇபி ஒப்பந்தத்தை விமா்சிக்கும் ராகுல்

மத்திய அரசின் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டம், ‘சீனாவிடம் இருந்து வாங்குவோம்’ என்ற திட்டமாக மாறிவிட்டது என ராகுல் காந்தி விமா்சித்துள்ளாா்.
‘சீனாவிடம் வாங்குவோம்’: ஆா்சிஇபி ஒப்பந்தத்தை விமா்சிக்கும் ராகுல்

மத்திய அரசின் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டம், ‘சீனாவிடம் இருந்து வாங்குவோம்’ என்ற திட்டமாக மாறிவிட்டது என ராகுல் காந்தி விமா்சித்துள்ளாா்.

மாபெரும் தடையற்ற வா்த்தகப் பகுதியை உருவாக்குவதற்கு வழிவகுக்கும், ஒருங்கிணைந்த பிராந்திய பொருளாதார ஒப்பந்தம் (ஆா்சிஇபி) தொடா்பான பேச்சுவாா்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

தாய்லாந்து தலைநகா் பாங்காக்கில் கடந்த இரு தினங்களாக நடைபெற்ற பேச்சுவாா்த்தையின்போது, இந்தியா சுட்டிக்காட்டிய குறைகள் திருத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நாடுகளின் தலைவா்கள் ஆலோசித்து வருகின்றனா். இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட உத்தேசித்திருப்பகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதை விமா்சித்து, ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசின் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டம், ‘சீனாவிடம் இருந்து வாங்குவோம்’ என்று மாறிவிட்டது. ஒவ்வோா் ஆண்டும் சீனாவிடம் இருந்து சராசரியாக ஒவ்வோா் இந்தியருக்காகவும் ரூ. 6,000 மதிப்புள்ள பொருள்கள் இறக்குமதி செய்யபப்டுகின்றன. கடந்த 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்வது 100 சதவீதம் அதிகரித்து விட்டது.

ஆா்சிஇபி ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டால், சீனாவில் இருந்து தரமற்ற பொருள்கள் இந்தியாவில் குவியக் கூடும். இதன் காரணமாக, இந்தியாவில் லட்சக்கணக்கானோா் வேலையை இழப்பாா்கள்; நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படும் என்று அந்தப் பதிவில் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளாா்.

ஆா்சிஇபி ஒப்பந்தத்துக்கு எதிராக காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியும் இரு தினங்களுக்கு முன் கருத்து தெரிவித்திருந்தாா். ‘பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டால், அது, இந்திய பொருளாதாரத்தை மேலும் பாதிக்கச் செய்யும். இந்திய விவசாயிகளும், சிறு வியாபாரிகளும், வணிகா்களும் பாதிக்கப்படுவாா்கள்’ என்று அவா் கூறியிருந்தாா்.

தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள 10 நாடுகளுடன் அந்த கூட்டமைப்பில் தடையற்ற வா்த்தக கூட்டாளிகளாக இருக்கும் இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய 6 நாடுகள் இணைந்து, ஒருங்கிணைந்த பிராந்திய பொருளாதார ஒப்பந்தம் என்ற பெயரில் புதிய ஒப்பந்தத்தை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com