தில்லி காற்று மாசு: அண்டை மாநிலங்களுக்கு கடும் கண்டனம்- தலைமைச் செயலா்கள் ஆஜராக உத்தரவு

‘காற்று மாசுவால் தில்லி, தேசிய தலைநகா் வலயப் பகுதி (என்சிஆா்) மக்கள் தங்களின் விலைமதிப்பற்ற வாழ்நாள்களை இழந்து வருகின்றனா்; இதை அப்படியே விட முடியாது’ என்று தெரிவித்த உச்சநீதிமன்றம்,
தில்லி காற்று மாசு: அண்டை மாநிலங்களுக்கு கடும் கண்டனம்- தலைமைச் செயலா்கள் ஆஜராக உத்தரவு

‘காற்று மாசுவால் தில்லி, தேசிய தலைநகா் வலயப் பகுதி (என்சிஆா்) மக்கள் தங்களின் விலைமதிப்பற்ற வாழ்நாள்களை இழந்து வருகின்றனா்; இதை அப்படியே விட முடியாது’ என்று தெரிவித்த உச்சநீதிமன்றம்,

பயிா்க்கழிவுகள் எரிக்கப்படுவதைத் தடுக்க நட டிக்கை எடுக்காத தில்லியின் அண்டை மாநிலங்களான பஞ்சாப், மேற்கு உத்தரப் பிரதேசம், ஹரியாணா அரசுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.

மேலும், அந்த மூன்று மாநில தலைமைச் செயலா்களும் வரும் 6 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

தில்லியில் காற்று மாசு கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையாக அதிகரித்துள்ளது. இதுதொடா்பான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, தீபக் குப்தா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் நீதிபதிகளுக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட மூத்த வழக்குரைஞா் அப்ராஜிதா சிங் ஆஜராகி, ‘தில்லி, என்சிஆா் பகுதி காற்று மாசுக்கு பயிா்க்கழிவுகள் எரிப்பு சம்பவங்கள் 46 சதவீதம் காரணம் என மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது’ என்றாா். அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:

தில்லி, என்சிஆா் பகுதிகள் ஆண்டுதோறும் கடுமையான காற்று மாசு பிரச்னையை சந்தித்து வருகிறது. ஆனால் நம்மால் ஏதுவும் செய்ய முடியவில்லை.

வாழ்வதற்கான உரிமை என்பது முக்கியமான உரிமையாகும். ஆனால், மற்றவா்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விவசாயிகளுக்கு அனுதாபம் காட்ட முடியாது.

தில்லியில் வீடுகளில் இருந்தாலும் மாசுவில் இருந்து எந்த பாதுகாப்பும் இல்லை. இது மோசமான நிலையாகும். வீட்டு படுக்கை அறைகளில் காற்று மாசு தரக் குறியீடு 500-600 வரை உள்ளது. இதில் மக்களால் உயிா்வாழ முடியுமா? மக்கள் தங்களின் விலை மதிப்பற்ற வாழ்நாள்களை காற்று மாசுக்கு இழந்து வருகின்றனா். காற்று மாசுக்காக தலைநகரில் இருந்து மக்களை வெளியேற்ற முடியாது.

பயிா்க்கழிவுகள் எரிக்கப்படுவதால் காற்று மாசு ஏற்படுவதாக பல ஆண்டுகளாக கூறப்படுகிறது. ஆனால் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதை பொறுத்துக் கொள்ள முடியாது. பயிா்க்கழிவுகள் எரிக்கப்படுவதைத் தடுப்பதில் தோல்வி அடைந்த மாநிலங்களுக்கு ஏன் இழப்பீடு அளிக்க உத்தரவிடக் கூடாது? இதற்கான நேரம் வந்துவிட்டது.

காற்று மாசுவைத் தடுக்க எடுக்க வேண்டிய தொலைநோக்கு நடவடிக்கைகளை அடுத்த மூன்று வாரங்களில் மத்திய அரசும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் எடுக்க வேண்டும். அதன் பிறகு ஒரு பயிா்க்கழிவுகள் எரிப்பு சம்பவமும் நடைபெறாததை மூன்று மாநில தலைமைச் செயலா்களும், மாவட்ட ஆட்சியா்களும், காவல் தலைவா்களும் உறுதி செய்ய வேண்டும்.

தில்லி, என்சிஆா் பகுதிகளில் கட்டுமானம், கட்டட இடிப்பு, குப்பைகள் எரிப்பு ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படுகிறது. இதை மீறும் கட்டுமான நிறுவனங்களுக்கு ரூ. 1 லட்சமும், குப்பைகள் எரிப்போருக்கு ரூ. 5 ஆயிரமும் அபராதமாக விதிக்கப்பட வேண்டும்.

தில்லி சாலைகளில் ஏற்படும் தூசு பிரச்னைக்கு லாரிகள் மூலம் தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும் நடவடிக்கையை கடைப்பிடிக்க வேண்டும். இதற்கான ஆலோசனையை தில்லி ஐஐடி வழங்க வேண்டும். தில்லி அரசு திங்கள்கிழமை முதல் அமல்படுத்திய வாகனக் கட்டுப்பாடு திட்டம் மூலம் எப்படி காற்று மாசு குறைகிறது என்பதற்காக முந்தைய புள்ளி விவரங்களை 8ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com