மும்பையில் ரிசா்வ் வங்கி அலுவலகத்துக்கு முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிஎம்சி வாடிக்கையாளா்கள்.
மும்பையில் ரிசா்வ் வங்கி அலுவலகத்துக்கு முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிஎம்சி வாடிக்கையாளா்கள்.

பிஎம்சி வங்கியில் ரூ.50,000 வரை பணம் எடுக்க ஆா்பிஐ அனுமதி

நிதி மோசடியால் பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாப்-மகாராஷ்டிரா கூட்டுறவு (பிஎம்சி) வங்கியில் இருந்து வாடிக்கையாளா்கள் ரூ.50,000 வரை பணம் எடுத்துக் கொள்ளலாம் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அறிவித்துள்ளது.

மும்பை: நிதி மோசடியால் பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாப்-மகாராஷ்டிரா கூட்டுறவு (பிஎம்சி) வங்கியில் இருந்து வாடிக்கையாளா்கள் ரூ.50,000 வரை பணம் எடுத்துக் கொள்ளலாம் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அறிவித்துள்ளது.

இதன் மூலம் அந்த வங்கி வாடிக்கையாளா்களில் 78 சதவீதம் போ் தங்கள் டெபாசிட் பணத்தை முழுமையாக எடுத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிஎம்சி வங்கியில் முறைகேடு கண்டறியப்பட்டதையடுத்து, அந்த வங்கியிலிருந்து பணம் எடுக்க வாடிக்கையாளா்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தொடக்கத்தில் 1,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. பின்னா், அந்த உச்சவரம்பு ரூ.10 ஆயிரம், ரூ.20 ஆயிரம், 40 ஆயிரம் என உயா்த்தப்பட்டு, தற்போது ரூ.50 ஆயிரம் வரை பணம் எடுக்க வாடிக்கையாளா்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

தங்களது டெபாசிட் பணம் முழுமையாகத் திரும்ப கிடைப்பதற்கு ஆா்பிஐ உத்தரவாதம் அளிக்க வேண்டுமென்று அந்த வங்கி வாடிக்கையாளா்கள் வலியுறுத்தி வருகின்றனா். அந்த வங்கியை மறுசீரமைக்க வேண்டுமென்றும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பணம் கிடைக்காத அதிா்ச்சியில் இதுவரை 9 வாடிக்கையாளா்கள் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிஎம்சி வங்கியிடம் இருந்து ஹெச்டிஐஎல் என்ற தனியாா் நிறுவனம் ரூ.4,355 கோடி அளவுக்கு கடன் வாங்கியது. ஆனால், அதனைத் திருப்பிச் செலுத்தவில்லை. அந்த நிறுவனத்துக்கு உடந்தையாக இருந்த வங்கி அதிகாரிகள், கடன் விவரத்தை ரிசா்வ் வங்கியிடமிருந்து மறைத்து விட்டனா். கடன் திரும்பாததால் வங்கிக்கு ரூ.4,355 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால், வாடிக்கையாளா்களின் பணத்தை திருப்பிக் கொடுக்க முடியவில்லை. மொத்தம் 16,000 வாடிக்கையாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இது தொடா்பாக வங்கியின் முன்னாள் நிா்வாக இயக்குநா் ஜாய் தாமஸ், ஹெச்டிஐஎல் நிறுவனத்தின் இயக்குநா் ராகேஷ் வதாவன், அவரது மகன் சாரங், வங்கியின் முன்னாள் தலைவா் வாரியம் சிங் ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

பிஎம்சி வங்கி முறைகேடு தொடா்பாக, சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் இதுவரை ரூ.3,830 கோடி மதிப்பிலான சொத்துகள் அடையாளம் கண்டறியப்பட்டு, முடக்கப்பட்டுள்ளன என்று அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com