பணமதிப்பிழப்பு நடவடிக்கை அம்பானி, அதானிக்கு முன்னதாகவே தெரியும்: பாஜக எம்.எல்.ஏவின் சர்ச்சை வீடியோ!

கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ஆம் தேதி இரவு, புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு திடீரென்று அறிவித்தது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை அம்பானி, அதானிக்கு முன்னதாகவே தெரியும்: பாஜக எம்.எல்.ஏவின் சர்ச்சை வீடியோ!

கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ஆம் தேதி இரவு, புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு திடீரென்று அறிவித்தது. மத்திய அரசின் இந்த திடீர் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் பல கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தன. பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவித்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும், இந்த நடவடிக்கையால் தான் இந்தியப் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்தது என்று தற்போது வரை பொருளாதார நிபுணர்கள் பலர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.  

இந்நிலையில், பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட போது, ராஜஸ்தான் கோட்டா பகுதியைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ பவானி சிங் ராஜாவத் பேசிய ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. தற்போதும் இது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

அவர் ஒரு வீடியோவில், 'மத்திய அரசு 2016, நவம்பர் 8-ஆம் தேதி பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டதற்கு முன்னதாகவே, அதானி, அம்பானி உள்ளிட்டோர் இதுகுறித்து தெரிந்திருந்தனர். அவர்களுக்கு குறிப்புடன் இது தெரியப்படுத்தப்பட்டிருந்தது. அதற்கேற்ப அவர்கள் முன்னேற்பாடுகளை செய்திருந்தனர்' என்று குறிப்பிட்டார். 

மேலும், 'பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டதற்கு முன்னதாகவே மாற்று ஏற்பாடுகளை அரசு செய்திருக்க வேண்டும். புதிய நாணயத்தை தேவைக்கேற்ப அச்சிட்டிருக்க வேண்டும். பணமதிப்பிழப்பு நடவடிக்கை திட்டமிடப்படாத ஒன்று. படிப்படியாக இதனை செயல்படுத்தியிருக்கலாம்' என்று கூறினார். பாஜக எம்.எல்.ஏவின் இந்த பேச்சு பின்னர் பல்வேறு கேள்விகளை எழுப்பியதோடு, சர்ச்சையையும் ஏற்படுத்தியது. 

பவானி சிங் கடந்த காலங்களில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். ஒரு சமயம் கோட்டா பயிற்சி மையங்களில் உள்ள பீகாரி மாணவர்களை சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். அதேபோன்று, வழுக்கை ஏற்படும் என்பதால் ஹெல்மெட் அணிவதைத் தவிர்க்குமாறு வாகன ஓட்டிகளுக்கு அவர் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com