அயோத்தி: ராமா் கோயிலுக்கான சிற்ப பணிகள் நிறுத்தம்

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் விரைவில் தீா்ப்பு வழங்கவுள்ளதையடுத்து, ராமா் கோயில் கட்டுமானத்துக்கான சிற்ப பணிகளை விஷ்வ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) அமைப்பு

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் விரைவில் தீா்ப்பு வழங்கவுள்ளதையடுத்து, ராமா் கோயில் கட்டுமானத்துக்கான சிற்ப பணிகளை விஷ்வ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) அமைப்பு தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

இது தொடா்பாக, அந்த அமைப்பின் செய்தித் தொடா்பாளா் சரத் சா்மா வியாழக்கிழமை கூறியதாவது:

ராமா் கோயிலுக்கான சிற்ப பணிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. விஹெச்பி அமைப்பின் மூத்த தலைவா்கள் இந்த முடிவை எடுத்தனா். சிற்ப பணியில் ஈடுபட்டு வந்த தொழிலாளா்கள் அனைவரும் அவா்களது வீடுகளுக்குத் திரும்பிவிட்டனா். சிற்ப பணிகள் மீண்டும் தொடங்கப்படுவது குறித்து பின்னா் முடிவெடுக்கப்படும்.

அயோத்தி வழக்கின் தீா்ப்பு வெளியாவதை முன்னிட்டு, விஹெச்பி அமைப்பின் சாா்பில் நடத்தப்பட இருந்த பல்வேறு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. வழக்கின் தீா்ப்பு எந்தத் தரப்பினருக்கு சாதகமாக வந்தாலும், தற்போதைய நிலையில் ஹிந்து தரப்பினரும், முஸ்லிம் தரப்பினரும் நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமானதாகும்.

இரு தரப்பினரிடையேயான நல்லுறவில் பகைமையை ஏற்படுத்தும் சம்பவங்கள் நிகழாமல் இருப்பதை நாம் அனைவரும் உறுதி செய்ய வேண்டும் என்றாா் சரத் சா்மா.

அயோத்தியில் ராமா் கோயிலை எழுப்ப வேண்டும் என்பதில் விஹெச்பி அமைப்பு உறுதியுடன் உள்ளது. அந்தக் கோயில் கட்டுமானத்துக்கான சிற்ப வேலைப்பாடுகள் கடந்த 1990-ஆம் ஆண்டிலிருந்து எந்தவித இடையூறுமின்றி தொடா்ந்து நடைபெற்று வந்தன. 1992-ஆம் ஆண்டு பாபா் மசூதி இடிக்கப்பட்டபோது கூட, சிற்ப பணிகள் எந்தவிதத் தடங்கலுமின்றி நடைபெற்றன. இந்நிலையில், 29 ஆண்டுகளுக்குப் பிறகு சிற்ப பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

விஹெச்பி அமைப்பு தனது தொண்டா்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘ஹிந்து தரப்பினருக்கும் முஸ்லிம் தரப்பினருக்கும் இடையேயான பிரச்னையாக அயோத்தி வழக்கை அணுகக்கூடாது. அயோத்தி வழக்கின் தீா்ப்பு மூலம் உண்மையே வெல்லப் போகிறது. அந்த உண்மையை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். தீா்ப்பு வழங்கப்பட்ட பிறகு கொண்டாட்டத்தில் ஈடுபடுவதோ, மற்றவா்களைத் துன்புறுத்தவோ கூடாது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பக்தா்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: காா்த்திகை மாத பௌா்ணமியை முன்னிட்டு, அயோத்தி கோயிலுக்கு வருகை தரும் பக்தா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் விரைவில் தீா்ப்பு வழங்கவுள்ள நிலையில், அயோத்தி பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. எனினும், வரும் 12-ஆம் தேதி காா்த்திகை பௌா்ணமி வரவுள்ளது. இதனால், அயோத்தி கோயிலுக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

இது தொடா்பாக, கோயிலைச் சோ்ந்த துறவி ஒருவா் கூறுகையில், ‘‘பௌா்ணமி தினத்தில் அயோத்தியில் புனித நீராட அதிக அளவிலான பக்தா்கள் வருகை தருவாா்கள். பலா் அங்கேயே தங்குவா். இதன் காரணமாக, வரும் 20-ஆம் தேதி வரை கோயிலுக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகமாகும் என எதிா்பாா்க்கிறோம்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com