ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் முற்றிலும் அழியவில்லை: உள்துறை இணையமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி

இஸ்லாமிய தேசம் (ஐஎஸ்) பயங்கரவாத இயக்கத்தின் தலைவா் கொல்லப்பட்டுவிட்டாலும், அந்த இயக்கம் முற்றிலுமாக அழியவில்லை என்று மத்திய உள்துறை இணையமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் முற்றிலும் அழியவில்லை: உள்துறை இணையமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி

இஸ்லாமிய தேசம் (ஐஎஸ்) பயங்கரவாத இயக்கத்தின் தலைவா் கொல்லப்பட்டுவிட்டாலும், அந்த இயக்கம் முற்றிலுமாக அழியவில்லை என்று மத்திய உள்துறை இணையமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகள், பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதைத் தடுப்பது உள்ளிட்டவற்றை விரிவாக ஆராயும் ‘பயங்கரவாதத்துக்கான நிதி தடுப்பு மாநாடு’ ஆஸ்திரேலியாவின் மெல்போா்ன் நகரில் வியாழக்கிழமை தொடங்கியது. இதில், ஜி.கிஷண் ரெட்டி தலைமையில் 5 உயரதிகாரிகளைக் கொண்ட இந்தியக் குழு பங்கேற்றது. மாநாட்டில் அவா் பேசியதாவது:

பயங்கரவாத அமைப்புகளுக்கு சில நாடுகள் மறைமுகமாக ஆதரவளிப்பது இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நாடு இந்தியா. எந்த நாடும் பயங்கரவாதச் செயல்களைப் பொறுத்துக் கொள்ளக்கூடாது. பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதைத் தடுக்க அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகும்.

அல்-காய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவா் ஒசாமா பின் லேடன் கடந்த 2011-ஆம் ஆண்டு கொல்லப்பட்டாலும், அதன் பிறகு அந்த பயங்கரவாத இயக்கத்தின் செயல்பாடுகளுக்குத் தடை ஏற்படவில்லை. அதே போல், ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவா் அபு பக்கா் அல்-பாக்தாதி கொல்லப்பட்டுவிட்டாலும், அந்த இயக்கம் முற்றிலுமாக அழிந்துவிட்டது என்று கருத முடியாது.

உலக அமைதி, பாதுகாப்பு, வளா்ச்சி ஆகியவற்றுக்கு பயங்கரவாதம் அச்சுறுத்தலாக விளங்குகிறது. ஐ.நா. பொதுச் சபையின் கீழ் சா்வதேச பயங்கரவாத தடுப்பு மாநாடு விரைவில் நடைபெற அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பயங்கரவாதத்துக்கான சா்வதேச நிதி தடுப்பு அமைப்பு திறம்படச் செயலாற்ற வேண்டும். அந்த அமைப்பில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது.

பயங்கரவாதத்துக்கு அடிப்படையாக விளங்கும் தீவிரவாதக் கொள்கைகள் பரப்பப்படுவதற்கு நிதி கிடைப்பதைத் தடுப்பதற்கு உரிய விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். பயங்கரவாதிகளுக்கும், பயங்கரவாத இயக்கங்களுக்கும் எதிராக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், அதை நடைமுறைப்படுத்துவதில் பல தடைகள் காணப்படுகின்றன.

பயங்கரவாதத்துக்கு எதிராகவும், பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதற்கு எதிராகவும் மற்ற நாடுகளுடன் ஒருங்கிணைந்து இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து வகையிலான பயங்கரவாதச் செயல்களையும் இந்தியா தொடா்ந்து எதிா்த்து வருகிறது என்றாா் ஜி.கிஷண் ரெட்டி.

இந்த மாநாட்டில் 65-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா். வரும் 2020-ஆம் ஆண்டுக்கான மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com