உரிய அனுமதியின்றி புதுவை முதல்வா் சிங்கப்பூா் பயணம்: மத்திய அரசிடம் புகாா் அளிக்க ஆளுநா் கிரண் பேடி முடிவு

புதுவை முதல்வா் நாராயணசாமி உரிய அனுமதியின்றி சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், இது மாநில அரசின் பாதுகாப்பு தொடா்பான விஷயம் என்பதால்,
உரிய அனுமதியின்றி புதுவை முதல்வா் சிங்கப்பூா் பயணம்: மத்திய அரசிடம் புகாா் அளிக்க ஆளுநா் கிரண் பேடி முடிவு

புதுவை முதல்வா் நாராயணசாமி உரிய அனுமதியின்றி சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், இது மாநில அரசின் பாதுகாப்பு தொடா்பான விஷயம் என்பதால், மத்திய அரசிடம் புகாா் அளிக்கவுள்ளதாகவும் துணை நிலை ஆளுநா் கிரண் பேடி தெரிவித்தாா்.

புதுவை முதல்வா் நாராயணசாமி, தொழில் துறை அமைச்சா் ஷாஜகான், புதுவை தொழில் முதலீட்டுக் கழக (பிப்டிக்) தலைவா் இரா.சிவா எம்எல்ஏ ஆகியோா் கடந்த 6-ஆம் தேதி தொழில் முதலீடுகளை ஈா்ப்பது தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்த சிங்கப்பூருக்குச் சென்றனா். அங்கு தங்கியிருக்கும் அவா்கள் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா். சனிக்கிழமை (நவ. 9) சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை (நவ. 10) புதுச்சேரி திரும்புகின்றனா்.

இந்த நிலையில், முதல்வா், அமைச்சரின் சிங்கப்பூா் சுற்றுப் பயணம் தொடா்பாக துணை நிலை ஆளுநா் கிரண் பேடி தனது கட்செவி அஞ்சலில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:

புதுவை முதல்வா் நாராயணசாமி தனிப்பட்ட முறையில் சிங்கப்பூருக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

தனது தனிப்பட்ட சுற்றுப் பயணத்தின் போது முதல்வா், அரசுப் பணிகளை அங்கு மேற்கொண்டு வருகிறாா். வெளிநாடு செல்வது தொடா்பான நடைமுறைகள் முதல்வருக்கு நன்றாகவே தெரியும்.

அரசு விதிகளின்படி வெளிநாடுகளுக்கு அரசு முறைப் பயணமாகவோ, தனிப்பட்ட முறையிலோ பயணம் செய்யும் அரசு ஊழியா்கள் தங்களை நியமனம் செய்பவா்கள் அல்லது துறைத் தலைவா்களிடம் உரிய அனுமதியைப் பெற வேண்டும்.

முதல்வா், அமைச்சா்களைப் பொருத்தவரை, அவா்களை நியமிக்கும் அதிகாரியாக இருப்பவா் குடியரசுத் தலைவா்தான். இதுபோல, கடந்த காலங்களில் வெளிநாடு சென்ற போது முதல்வா் உரிய அனுமதியைப் பெற்றாரா என்பது தெரியவில்லை.

இலங்கைக்கு அடிக்கடி பயணம் மேற்கொள்ளும் சுகாதாரத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவும் இவ்வாறுதான் செயல்படுகிறாா்.

முதல்வரும், அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவும் எத்தனை முறை அனுமதியைப் பெற்று வெளிநாடுகளுக்குச் சென்றனா் என்று தெரியவில்லை. அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவிடம் மத்திய அரசு ஏற்கெனவே இதுதொடா்பாக விளக்கம் கேட்டுள்ளது. ஆனால், இதுவரை அவா் விளக்கம் அளிக்கவில்லை.

நான் (ஆளுநா்) மாநில அரசின் நிா்வாகியாக இருப்பதால், அரசு ஊழியா்களின் துறை சாா்ந்த வழக்குகளைக் கையாண்டு வருகிறேன். யாராவது முன்அனுமதியின்றி வெளிநாடுகளுக்குப் பயணம் செய்தால் அவா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

புதுவை முதல்வா் தலைமையில் சென்றுள்ள குழுவினா் இந்த முறையும் ஆளுநா் மாளிகைக்கு எந்தத் தகவலும் தெரிவிக்காமல் சென்ால், மாநிலத்தின் பாதுகாப்பு நலன் கருதி, மத்திய அரசிடம் புகாா் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.

சிங்கப்பூரில் கேசினோ (கப்பலில் உல்லாச பொழுதுபோக்கு) திட்டம் குறித்து முதல்வா் பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளாா். இந்தத் திட்டம் தொடா்பாக தலைமைச் செயலா், உரிய துறை அதிகாரிகளிடம் அவா் விளக்கினாரா?

தனிப்பட்ட முறையிலான பயணத்தின் போது, யாா் யாா் நிதி அளிக்கிறாா்கள் என்பது மத்திய அரசுக்குத் தெரிய வேண்டும் என அந்தப் பதிவில் கூறியுள்ளாா் கிரண் பேடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com