5 ஏக்கர் நிலத்தை ஏற்றுக்கொள்ளுமா சன்னி மத்திய வக்ஃபு வாரியம்? நவம்பர் 26-இல் முக்கிய முடிவு!

அயோத்தியில் மசூதி கட்டுவதற்கு ஒதுக்கப்படவுள்ள 5 ஏக்கர் நிலத்தை ஏற்றுக்கொள்வதா, வேண்டாமா என்ற முடிவை வரும் 26-ஆம் தேதி எடுக்கவுள்ளதாக சன்னி மத்திய வக்ஃபு வாரியம் தெரிவித்துள்ளது.
சன்னி வக்ஃபு வாரியத்தின் வழக்கறிஞர் (கோப்புப்படம்)
சன்னி வக்ஃபு வாரியத்தின் வழக்கறிஞர் (கோப்புப்படம்)


அயோத்தியில் மசூதி கட்டுவதற்கு ஒதுக்கப்படவுள்ள 5 ஏக்கர் நிலத்தை ஏற்றுக்கொள்வதா, வேண்டாமா என்ற முடிவை வரும் 26-ஆம் தேதி எடுக்கவுள்ளதாக சன்னி மத்திய வக்ஃபு வாரியம் தெரிவித்துள்ளது.

பாபர் மசூதி நில வழக்கில் உச்சநீதிமன்றம் நேற்று (சனிக்கிழமை) வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்தது. அதில், சர்ச்சைக்குரிய அந்த இடம் ஹிந்துக்களுக்கே சொந்தமானது என்றும், அங்கு ராமர் கோயில் கட்டலாம் எனவும் உத்தரவிட்டது. அதேசமயம், முஸ்லிம் தரப்பினர் மசூதி கட்டுவதற்கு அயோத்தியிலேயே 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கவும் அரசுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், சன்னி மத்திய வக்ஃபு வாரியத்தின் பொதுக்குழு நவம்பர் 26-இல் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், மசூதி கட்டுவதற்கு அரசு ஒதுக்கவுள்ள 5 ஏக்கர் நிலத்தை ஏற்றுக்கொள்வது தொடர்பான முடிவு எடுக்கப்படவுள்ளது. இதுகுறித்து உத்தரப் பிரதேச சன்னி மத்திய வக்ஃபு வாரியத் தலைவர் ஸுஃபார் ஃபரூக்கி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், 

"வாரியத்தின் பொதுக்குழுக் கூட்டம் நவம்பர் 26-இல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த கூட்டத்தில், உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஒதுக்கப்படவுள்ள 5 ஏக்கர் நிலத்தை ஏற்றுக்கொள்வதா, வேண்டாமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். இந்த கூட்டம் முன்னதாக நவம்பர் 13-ஆம் தேதிக்கு திட்டமிடப்பட்டிருந்தது. அதன்பிறகு, தள்ளிவைக்கப்பட்டு தற்போது நவம்பர் 26-ஆம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிலத்தை எடுத்துக்கொள்வது குறித்து நான் பலவிதமான கருத்துகளைப் பெறுகிறேன். ஆனால், நேர்மறையைக்கொண்டுதான் எதிர்மறையை வெல்ல முடியும் என்று நான் தனிப்பட்ட முறையில் உணர்கிறேன். சிலர் பாபர் மசூதிக்காக நிலத்தை எடுத்துக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்துகின்றனர். ஆனால், அது எதிர்மறையை வளர்க்கும் என நினைக்கிறேன். மத்தியஸ்தம் வெற்றி பெறாதபோதிலும் எனது பார்வை தெளிவாக உள்ளது.

இன்னும் சிலர் 5 ஏக்கர் நிலத்தை எடுத்துக்கொண்டு, அந்த வளாகத்தில் மசூதியுடன் கூடிய கல்வி நிறுவனத்தை நிறுவுமாறு அறிவுறுத்தியுள்ளனர். நிலத்தைப் பொறுத்தவரை அரசு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைப் பின்பற்ற வேண்டும். அதை எடுத்துக்கொள்வதா வேண்டாமா என்பதை நாங்கள் முடிவு செய்வோம். 

கூட்டத்தில் நிலத்தை எடுத்துக்கொள்வதாக முடிவு எடுக்கப்பட்டால், அதன்பிறகு அதற்கான நிபந்தனைகள் குறித்து நாங்கள் முடிவு செய்வோம். 

இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். சீராய்வு மனு தாக்கல் செய்யும் திட்டம் எதுவும் வாரியத்துக்குக் கிடையாது. தேசநலன் கருதி, நிலத்துக்கு உரிமைகோரி தாக்கல் செய்ததை நிபந்தனைகளுடன் திரும்பப் பெறுவது குறித்து வாரியம் கடந்த மாதம் முன்மொழிந்தது" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com