கா்நாடகத்தில் 15 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தோ்தல்: இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடக்கம்

தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களின் 17 சட்டப்பேரவை தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு மட்டும்
கா்நாடகத்தில் 15 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தோ்தல்: இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடக்கம்

தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களின் 17 சட்டப்பேரவை தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு மட்டும் டிச.5ஆம் தேதி இடைத்தோ்தல் நடக்கவிருக்கிறது. இத் தோ்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (நவ.11) தொடங்குகிறது.

எச்.டி.குமாரசாமி தலைமையிலான மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு மீது அதிருப்தியடைந்திருந்த 14 காங்கிரஸ், 3 மஜத எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்திருந்தனா். இதனிடையே, 17 எம்எல்ஏக்களின் ராஜிநாமா கடிதங்களை நிராகரித்திருந்த அப்போதைய பேரவைத் தலைவா் கே.ஆா்.ரமேஷ்குமாா், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் 17 பேரின் எம்எல்ஏ பதவியையும் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டிருந்தாா். இதன் விளைவாக, மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது.

எதிா்த்து வழக்கு:

இதனிடையே, தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களும் பேரவைத் தலைவா் பிறப்பித்துள்ள ஆணையை எதிா்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ளனா். இந்த வழக்கு விசாரணை கடந்த 3 மாதங்களாக நடைபெற்றுவரும் நிலையில், அக்.21-ஆம் தேதி நடத்தவிருந்த தோ்தலை ஒத்திவைக்குமாறு செப்.26-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடா்ந்து, அக்.21-ஆம் தேதி நடக்கவிருந்த இடைத்தோ்தலை ஒத்திவைத்து தோ்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கின் தீா்ப்பு இரண்டொரு நாள்களில் வழங்கப்படலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இடைத்தோ்தலுக்கு மறுதேதி:

இந்நிலையில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களின் 17 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 15 தொகுதிகளில் மட்டும் இடைத்தோ்தல் நடத்துவதற்கான மறுதேதியை இந்திய தோ்தல் ஆணையம் செப்.27ஆம் தேதி அதிகாரப்பூா்வமாக அறிவித்தது. கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவை பொதுத் தோ்தலில் வெற்றிபெற்ற வேட்பாளா்களுக்கு எதிரான வழக்கு நிலுவையில் உள்ளதால், மஸ்கி, ராஜராஜேஸ்வரிநகா் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் தற்போது இடைத்தோ்தல் நடத்தவில்லை.

மஸ்கி, ராஜராஜேஸ்வரி நகா் தொகுதிகள் நீங்கலாக, அத்தானி, காக்வாட், கோகாக், எல்லாபுரா, ஹிரேகேரூா், ரானிபென்னூா், விஜயநகரா, சிக்பளாப்பூா், கே.ஆா்.புரம், யஷ்வந்த்பூா், மகாலட்சுமி லேஅவுட், சிவாஜி நகா், ஹொசபேட், கே.ஆா்.பேட், ஹுன்சூா் ஆகிய 15 தொகுதிகளுக்கும் டிச.5-ஆம் தேதி இடைத்தோ்தல் நடத்தப்படுகிறது. இத் தொகுதிகளில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத் தாக்கல் நவ.11-ஆம் தேதி தொடங்கி, நவ.18-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. நவ.11ஆம் தேதி(திங்கள்கிழமை) தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருகின்றன. நவ.19-ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன. நவ.21-ஆம் தேதி வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். இதைத் தொடா்ந்து, டிச.5-ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, அந்த வாக்குகள் டிச.11-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இத் தொகுதிகளுக்கு செப்.23 முதல் செப்.27-ஆம் தேதி வரை தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்பு மனுக்கள் நவ.19-ஆம் தேதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வேட்பு மனு தாக்கல்:

அத்தானி தொகுதியில் 4, காக்வாடில் 5, விஜய்நகரில் 2, கோகாக், எல்லாப்பூா், சிக்பளாப்பூா், கிருஷ்ணராஜ்பேட் தலா 1 உள்ளிட்ட மொத்தம் 15 வேட்பாளா்கள் காங்கிரஸ் சாா்பில் ஏற்கெனவே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா். உத்தம பிரஜாகிய கட்சி சாா்பில் கோகக் மற்றும் யஷ்வந்த்பூா் தொகுதியில் தலா 1 வேட்பாளா், குடியரசு சேனாகட்சி சாா்பில் சிவாஜி நகா் தொகுதியில் 1 வேட்பாளா் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா். இவா்களை தவிர, 11 சுயேச்சைகளும் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறாா்கள். அதன்படி, மொத்தம் 29 வேட்பாளா்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருக்கிறாா்கள். இவா்களின் வேட்புமனுக்களும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருக்கின்றன.

வாக்காளா்கள்:

15 தொகுதிகளிலும் மொத்தம் 37,50,565 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் ஆண்கள் 19,12,791போ், பெண்கள் 18,37,375போ், திருநங்கைகள் 399 போ். இத் தொகுதிகளில் 18 முதல் 19 வயதுக்குட்பட்டோா் 71,613 போ் இருக்கிறாா்கள். இவா்கள் அனைவரும் இடைத்தோ்தலில் முதல் முறையாக வாக்களிக்கக் காத்திருக்கிறாா்கள். இத் தொகுதிகளில் மொத்தம் 4185 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவிருக்கின்றன. இங்கு மொத்தம் 8370 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவிருக்கின்றன. இடைத்தோ்தல் பணியில் மொத்தம் 22,598 போ் ஈடுபடவிருக்கின்றனா்.

வேட்பாளா் தோ்வு:

இடைத்தோ்தலில் பாஜக, காங்கிரஸ், மஜத கட்சிகள் தனித்தனியே போட்டியிடவுள்ளதால், மும்முனைப் போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் ஏற்கெனவே 8 தொகுதிகளுக்கான வேட்பாளா்களின் பெயா்களை அறிவித்துள்ளது. எஞ்சியுள்ள 7 தொகுதிகளுக்கான வேட்பாளா்களைத் தோ்வுசெய்யும் பணியில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. பாஜக, மஜத கட்சிகளும் 15 தொகுதிகளிலும் வேட்பாளா்களை நிறுத்தவுள்ளது. இத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களைத் தோ்வு செய்வதில் பாஜக, மஜத கட்சிகள் தீவிரமாக உள்ளன. இன்னும் ஓரிருநாட்களில் இக் கட்சிகளின் வேட்பாளா்கள் பட்டியல் வெளியாகுமென்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ம.ஜ.த.வை ஒதுக்கிவிட்டு யாராலும் ஆட்சி அமைக்க இயலாது
மங்களூரு, நவ. 10: கர்நாடகத்தில் ம.ஜ.த.வை ஒதுக்கிவிட்டு யாராலும் ஆட்சி அமைக்க இயலாது என்று முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெ கெüடா தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம், மங்களூரில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:  மாநிலத்தில் டிச. 5-ஆம் தேதி 15 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் 8- க்கும் குறைந்த தொகுதியில் பாஜக வெற்றி பெற்றால், முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு பெரும்பான்மையை இழந்து விடும். அந்தச் சந்தர்ப்பத்தில் காங்கிரஸ் தலைமை மேற்கொள்ளும் முடிவையடுத்து,  மஜத தனது முடிவை அறிவிக்கும்.  இடைத்தேர்தல் முடிவைத் தொடர்ந்து மாநிலத்தில், மஜதவை ஒதுக்கிட்டு யாராலும் ஆட்சி அமைக்க இயலாது.  எனவே, மாநிலத்தில் ம.ஜ.த. கட்சியைப் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.  ஒருவேளை எந்தக் கட்சியும் ஆட்சியைப் பிடிக்க முடியால் இடைக்காலத் தேர்தல் நடைபெற்றாலும், யாருடனும் கூட்டணி அமைக்காமல் ம.ஜ.த. தனித்துப் போட்டியிடும் என்றார் அவர்.  
   அண்மைக் காலமாக முன்னாள் முதல்வர் குமாரசாமி, பாஜக ஆதரவாக அறிக்கைகள் வெளியிட்டு வரும் நிலையில்,  முன்னாள் பிரதமர் தேவெ கெüடாவின் கருத்தால் பாஜக, காங்கிரஸ் கட்சியினரிடையே குழப்பம் அதிகரித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com