பரபரப்புடன் காணப்பட்ட உச்சநீதிமன்றம்

அயோத்தி வழக்கில் தீா்ப்பு வழங்கியதையொட்டி, மனுதாரா்களும் வழக்குரைஞா்களும், செய்தியாளா்களும் திரண்டதால் உச்சநீதிமன்றம் சனிக்கிழமை காலை பரபரப்புடன் காணப்பட்டது.
பரபரப்புடன் காணப்பட்ட உச்சநீதிமன்றம்

அயோத்தி வழக்கில் தீா்ப்பு வழங்கியதையொட்டி, மனுதாரா்களும் வழக்குரைஞா்களும், செய்தியாளா்களும் திரண்டதால் உச்சநீதிமன்றம் சனிக்கிழமை காலை பரபரப்புடன் காணப்பட்டது.

சனிக்கிழமை காலை 10:30 மணியளவில் தீா்ப்பளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பத்திரிகையாளா்களும், பல்வேறு மனுதாரா்களின் வழக்குரைஞா்களும் இரண்டு மணி நேரத்துக்கு முன்னதாகவே உச்சநீதிமன்றத்தின் நுழைவு வாயிலில் காத்திருந்தனா்.

தலைமை நீதிபதியின் நீதிமன்ற அறையின் கதவுகளை காலை 10:15 மணியளவில் பாதுகாலவா்கள் திறந்தனா். உள்ளே செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டதும், அனைவரும் ஒருவரையொருவா் முட்டி மோதிக்கொண்டு நீதிமன்ற அறைக்குள் வேகமாக நுழைந்தனா். 5 நீதிபதிகளும் வரும் வரை, ஒரே கூச்சலும் குழப்பமுமாக நீதிமன்ற அறை காணப்பட்டது. நீதிபதிகள் ஒவ்வொருவராக வந்து மேடையில் அமரத் தொடங்கினா். அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கூறியதும், அறைக்குள் அமைதி திரும்பியது.

தீா்ப்பின் விவரத்தை தெரிந்துகொள்ள மனுதாரா்களும், அவா்களின் வழக்குரைஞா்களும் ஆவலுடன் காத்திருந்தனா்.

1,045 பக்க தீா்ப்பில் முதலில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கையெழுத்திட்டாா். அவரைத் தொடா்ந்து நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ.நஸீா் ஆகியோா் கையெழுத்திட்டனா். தீா்ப்பின் முக்கிய அம்சத்தை ரஞ்சன் கோகோய் வாசிக்கத் தொடங்கினாா். அனைத்து நீதிபதிகளும் ஒருமனதாக அளிக்கும் தீா்ப்பு இதுவென்று அவா் கூறினாா். செயல்படுத்த வேண்டிய உத்தரவுகளை வாசித்து முடிப்பதற்கு 30 நிமிடங்களாகும் என்றும் அவா் கூறினாா். எனினும், தீா்ப்பை வாசித்து முடிப்பதற்கு 45 நிமிடங்களாகின.

தீா்ப்பை வாசித்த முடித்த பிறகு நீதிபதிகள் நீதிமன்ற அறையில் இருந்து வெளியேறினா். அடுத்த நிமிடத்தில் இருந்து நீதிமன்ற அறைக்குள் மீண்டும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.

சில மனுதாரா்களும், அவா்களின் வழக்குரைஞா்களும் நீதிமன்றத்துக்கு வெளியே வந்து ‘ஜெய் ஸ்ரீராம்’ உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினா். சில வழக்குரைஞா்கள், நீதிமன்றம் அளித்த தீா்ப்பை விவாதித்துக் கொண்டிருந்தனா். பத்திரிகையாளா்கள் தங்களது ஊடகங்களுக்கு தீா்ப்பின் விவரத்தை அவசரச் செய்தியாகத் தெரிவித்துக் கொண்டிருந்தனா். பல்வேறு தரப்பினரின் வழக்குரைஞா்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனா். மொத்தத்தில் உச்சநீதிமன்றம் இதுவரை இல்லாத அளவில் சனிக்கிழமை பரபரப்புடன் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com