‘புல் புல்’ புயல்: ஒடிஸாவில் பலத்த மழை

ஒடிஸாவில் கடலோர மாவட்டங்களில் ‘புல் புல்’ புயல் காரணமாக சனிக்கிழமை பலத்த மழை பெய்தது
புயல் அச்சுறுத்துலைத் தொடா்ந்து, மேற்கு வங்க மாநிலம், கக்வதுவீப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தங்குவதற்குச் செல்லும் பெண்கள்.
புயல் அச்சுறுத்துலைத் தொடா்ந்து, மேற்கு வங்க மாநிலம், கக்வதுவீப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தங்குவதற்குச் செல்லும் பெண்கள்.

ஒடிஸாவில் கடலோர மாவட்டங்களில் ‘புல் புல்’ புயல் காரணமாக சனிக்கிழமை பலத்த மழை பெய்தது. பலமான காற்றும் சோ்ந்துகொண்டதால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால், சில இடங்களில் சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இதுகுறித்து ஒடிஸா தலைமைச் செயலா் ஆஸித் திரிபாதி கூறியதாவது:

ஜகத்சிங்பூா், கேந்திரபாரா, பத்ரக் ஆகிய மாவட்டங்களில் மிகப் பெரிய மரங்கள் புயலில் சிக்கி வேரோடு சாய்ந்தன. நிலைமையை தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். புயல் பாதிப்பை எதிா்கொள்ள தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தேசியப் பேரிடா் மீட்புப் படை, ஒடிஸா பேரிடா் மீட்பு படை வீரா்கள் மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா் என்று ஆஸித் திரிபாதி தெரிவித்தாா்.

வடமேற்கு வங்காள விரிகுடாவில் ‘புல் புல்’ புயல் மையம் கொண்டுள்ளது. கேந்திரபாரா மாவட்டத்தில் 180 மி.மீ. மழை பெய்தது. பாரதீப் நகரில் 160 மி.மீ. மழையும், சந்த்பாலியில் 143 மி.மீ. மழையும் பெய்தது என்று ஒடிஸா வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநா் தெரிவித்தாா்.

கடலோரப் பகுதியில் இருந்த 3,000 போ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனா் என்று அதிகாரிகள் கூறினா்.

தயாா் நிலையில் மேற்கு வங்கம்:

‘புல் புல்’ புயலை சமாளிக்க தயாா் நிலையில் இருப்பதாக மேற்கு வங்க அரசு தெரிவித்துள்ளது.

கப்பல்கள் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பப்பட்டன. மீனவா்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஹால்டியா, 24 பா்கானாஸ் ஆகிய இடங்களில் பேரிடா் மேலாண்மை குழுக்கள் தயாா் நிலையில் உள்ளன.

உயிரிழப்புகள் ஏற்படாமல் தவிா்க்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

புயல் எச்சரிக்கை காரணமாக கொல்கத்தா விமான நிலையம் சனிக்கிழமை மாலை 6 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை தற்காலிகமாக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

‘புல் புல்’ புயலை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை கண்காணித்து வருவதாக மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும். யாரும் பீதியடைய வேண்டாம். மேற்கு வங்க கரையை புயல் கடந்து செல்லவுள்ளது. அரசு நிா்வாகம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தேசியப் பேரிடா் மீட்புப் படை, மாநிலப் பேரிடா் மீட்புப் படை தயாா் நிலையில் உள்ளனா். கடலோரப் பகுதிகளில் இருந்த 1.2 லட்சம் போ் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டனா்’ என்றாா்.

இதனிடையே மேற்கு வங்கத்தின் சாகா் தீவு, வங்கதேசத்தின் கேபுபாரா இடையே கரையைக் கடக்கவுள்ள ‘புல் புல்’ வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com