கரசேவகர்கள் தியாகிகள்; கிரிமினல் வழக்குகளை திரும்பப் பெறுக: மோடிக்கு கிடைத்த அதிரவைக்கும் கடிதம்!

அயோத்தியில் பாபர் மசூதியை இடித்த கரசேவகர்கள் மீதான கிரிமினல் வழக்குகளை திரும்பப் பெறக் கோரி அகில பாரத இந்து மகா சபை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது.
கரசேவகர்கள் தியாகிகள்; கிரிமினல் வழக்குகளை திரும்பப் பெறுக: மோடிக்கு கிடைத்த அதிரவைக்கும் கடிதம்!


அயோத்தியில் பாபர் மசூதியை இடித்த கரசேவகர்கள் மீதான கிரிமினல் வழக்குகளை திரும்பப் பெறக் கோரி அகில பாரத இந்து மகா சபை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது.

பாபர் மசூதி நில வழக்கில் சர்சைக்குரிய அந்த இடம் இந்துக்களுக்கே சொந்தமானது என்றும் அங்கு ராமர் கோயில் கட்டலாம் என்றும் உச்சநீதிமன்றம் கடந்த சனிக்கிழமை தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில், பாபர் மசூதியை இடித்தது சட்டத்துக்குப் புறம்பானது எனக் குறிப்பிட்ட உச்சநீதிமன்றம், பாபர் மசூதியைக் கட்டுவதற்காக முஸ்லிம்களுக்கு அயோத்தியில் 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்குமாறும் அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பு வெளியாகி 3 நாட்களே ஆகியுள்ள நிலையில், அகில பாரத இந்து மகா சபையின் தேசியத் தலைவர் சுவாமி சக்ரபாணி பிரதமர் நரேந்திர மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

நவம்பர் 12-ஆம் தேதியிட்ட அந்த கடிதத்தில், 

"ராம் லல்லா பகுதி தற்போது சர்ச்சைக்குரிய இடம் அல்ல என்பது தெளிவாகிவிட்டது. அதேசமயம், அங்கு எழுப்பப்பட்ட விதானமும் கோயிலுடையது என்பதும், அது பாபர் மசூதியைச் சேர்ந்தது அல்ல என்பதும் தெளிவாகியுள்ளது. எனவே, பாபர் மசூதியை இடித்ததற்காக போடப்பட்ட கிரிமினல் வழக்குகள் என்பது, ராமரை வழிபடுபவர்கள் தவறுதலாக கோயிலின் விதானத்தை இடித்த செயலுக்கானதாகும். அவர்களுக்கு எதிராக போடப்பட்டுள்ள கிரிமினல் வழக்குகளை திரும்பப் பெற்று, இந்த விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்துகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 1992-இல் கொல்லப்பட்ட கரசேவகர்கள் மட்டுமல்லாமல், கரசேவையைச் செய்து முடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு மற்ற சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கும் தியாகி என்கிற அந்தஸ்தை வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதோடு நிறுத்தாமல், அயோத்தியில் அவர்களது பெயர்கள் பொறிக்கப்பட்ட தகடுகளும் அமைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதத்தில், ராமர் கோயில் கட்டுமானப் பணியில் ஈடுபடவுள்ள ஒவ்வொருவரும் மதப் போராளிகள் என போற்றப்பட வேண்டும் என்பதும் கோரிக்கையாக உள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பில், ராமர் கோயில் கட்டுவதற்காக அங்கிருந்த பாபர் மசூதியை இடித்தது சட்டத்துக்குப் புறம்பானது என உச்சநீதிமன்றம் தெளிவாகக் குறிப்பிட்டது. 

இதையடுத்து, உச்சநீதிமன்றமே இந்த சம்பவத்தை சட்டத்துக்குப் புறம்பானது என்று குறிப்பிடுவதன் மூலம், அதுதொடர்பான வழக்கையும் துரிதமாக நிறைவு செய்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தாதது ஏன் என தீர்ப்பு குறித்து சில கேள்விகள் எழுந்தது. மேலும், பாபர் மசூதியை இடித்தது சட்டத்துக்குப் புறம்பானது என்று குறிப்பிடுவதன்மூலம், அந்த இடத்தை மீண்டும் இஸ்லாமியர்களுக்கே ஒதுக்குவதுதானே நியாயமாக இருக்கும் எனவும் தீர்ப்பு குறித்து கேள்விகள் எழுந்தது.

இப்படிப்பட்ட சூழலில், தீர்ப்பு வெளியாகி 72 மணி நேரமே ஆகியுள்ள நிலையில், ஹிந்து மகா சபையில் இருந்து பிரதமருக்கு இப்படிப்பட்ட கடிதம் சென்றிருப்பது கேள்விக்குள்ளாகியுள்ளது.

1992-இல் கரசேவகர்கள் பாபர் மசூதியை இடித்ததால் ஏற்பட்ட மதக் கலவரத்தில் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com