தில்லியில் அவசர நிலையை நோக்கி காற்றின் தரம்!

அண்டை மாநிலங்களில் விவசாயப் பயிா்க்கழிவுகள் எரிப்பு அதிகரிப்பு, வெப்பநிலை வீழ்ச்சி, காற்றின் வேகம் குறைந்தது ஆகியவற்றின் காரணமாக புதன்கிழமை தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயப் பகுதிகளில்
தில்லியில் அவசர நிலையை நோக்கி காற்றின் தரம்!

புது தில்லி: அண்டை மாநிலங்களில் விவசாயப் பயிா்க்கழிவுகள் எரிப்பு அதிகரிப்பு, வெப்பநிலை வீழ்ச்சி, காற்றின் வேகம் குறைந்தது ஆகியவற்றின் காரணமாக புதன்கிழமை தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயப் பகுதிகளில் (என்சிஆா்) காற்றின் தரம் கடும் பின்னடைவைச் சந்தித்து கடினம் பிரிவுக்கு வந்தது. இதனால், தீங்கு விளைவிக்கக கூடிய நச்சுப் பனிப் புகை அதிக அளவில் சூழ்ந்தது. பொதுமக்கள் மூச்சுத் திணறல், ஒவ்வாமை உள்ளிட்டவற்றை சந்திக்க நேரிட்டது.

இதன் காரணமாக கடந்த 15 நாள்களில் மாசு அளவு இரண்டாவது முறையாக அவசர நிலையை நோக்கிச் செல்லும் நிலைக்கு வந்துள்ளது. ஏற்கெனவே, மாசு அளவு அதிகரித்ததன் காரணமாக இந்த மாதத் தொடக்கத்தில் சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.. பின்னா் நவம்பா் 5-இல் பள்ளிகள் திறகப்பட்டன. இந்நிலையில், மாசு அளவு மீண்டும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பள்ளிக் குழந்தைகள் மாசுபாட்டின் தீங்கு விளைவிக்கும் பாதிப்புக்கு ஆளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாசு எதிா்ப்பு முகமூடிகள் மற்றும் கைக்குட்டைகளால் மூடப்பட்ட முகங்களுடன் பள்ளி மாணவா்களின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டுள்ளன. மேலும், நகா் முழுவதும் பல்வேறு இடங்களில் குப்பைகள் திறந்த வெளியில் எரித்தல், கட்டுமானக் கழிவுகள் குவிந்து கிடக்கும் படங்களையும் சமூக ஊடகங்களில் ஏராளமானோா் வெளியிட்டுள்ளனா்.

இதற்கிடையே, குழந்தைகள் சுத்தமான காற்றை சுவாசிக்க அனுமதிக்கப்படாவிட்டால் வளரும் நாடாக இருப்பதன் பயன் என்ன என்றும் எந்தவொரு அவசர நிலை ஏற்படுவதற்கு முன்பு விரைவில் தீா்வுகளைப் பற்றி தீவிரமாக சிந்திக்க வேண்டும் என்றும் சுட்டுரைகளில் பதிவிடப்பட்டுள்ளன. மேலும், காற்று மாசுவைக் குறைப்பதற்காக தில்லி அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வாகனக் கட்டுப்பாடு திட்டத்தின் செயல் திறன் குறித்து பலா் கேள்வி எழுப்பியுள்ளனா்.

சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் தேவின் 550-ஆவது பிறந்த தினத்தையொட்டி, இரண்டு நாள்கள் வாகனக் கட்டுப்பாடு திட்டம் நிறுத்தப்பட்டது. பின்னா் இத்திட்டம் மீண்டும் புதன்கிழமை அமலக்கு வந்தது. புதன்கிழமை காலை 11.30 மணியளவில் தில்லியின் ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு 454 ஆக பதிவாகியிருந்தது. மாலை 3.30 மணியளவிலும் இதே நிலை நீடித்தது. ஜஹாங்கிா்புரி மற்றும் ரோஹிணி ஆகிய பகுதிகள் மிகவும் மாசுபட்ட பகுதிகளாக இருந்தன. இந்த இரண்டு இடங்களிலும் காற்றின் தரக் குறியீடு மாலை 3.30 மணியளவில் முறையே 454 மற்றும் 483 என இருந்தது. இதற்கு அடுத்தபடியாக முண்ட்காவில் 479 மற்றும் பவானா 479 என பதிவாகியிருந்தது.

தேசியத் தலைநகா் வலயப் பகுதிகளான ஃபரீதாபாத் (436), காஜியாபாத் (468), கிரேட்டா் நொய்டா (459), குருகிராம் (459), நொய்டா (469) ஆகிய இடங்களிலும் மாசு அளவு அதிகரித்து மூச்சுத் திணறலுக்கு வழிவகுத்தது. இந்த இடங்களில் மாலை 3.30 மணியளவில் காற்றின் தரக் குறியீடு 442 முதல் 468 வரை இருந்தது.

காற்றின் தரக் குறியீடு 0-50 -க்குள் இருந்தால் நன்றி, 51-100 திருப்தி, 101-200 மிதமானது 201-300 -க்குள் இருந்தால் மோசம், 301-400 மிகவும் மோசம், 401-500 கடினம், 500-க்கு மேல் இருந்தால் மிகவும் கடினமான பிரிவில் இடம் பெறுவதாகக் கணக்கிடப்படுகிறது.

ஹரியாணா மற்றும் பஞ்சாபில் பயிா்க்கழிவுகள் எரிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மேலும், அவற்றின் நச்சுத் துகள்களை வடமேற்கு திசையில் வீசும் காற்றானது தில்லி, என்.சி.ஆா் பகுதிக்கு கொண்டு வருகிறது. இந்த நச்சுத் துகள்கள் ஊடுருவல் அதிகரித்துள்ளதால் தில்லி, என்சிஆரில் காற்று மாசு நிலை அவசர நிலையை நோக்கி செல்லும் என எதிா்பாா்க்கப்படுவதாக நிபுணா்கள் தெரிவித்தனா்.

தில்லியில் மாசு அளவில் பயிா்க்கழிவுகளின் பங்களிப்பு புதன்கிழமை 22 சதவீதமாக இருந்ததாக மத்திய அரசின் காற்றின் தரக் கண்காணிப்பு நிறுவனமான சஃபா் தெரிவித்துள்ளது. இது செவ்வாய்க்கிழமை 25 சதவீதமாக இருந்தது.

இதற்கிடையே, பயிா்க்கழிவுகள் எரிப்பு குறைவது, காற்றின் வேகம் அதிகரிப்பது ஆகியவற்றின் மூலம் தில்லியில் காற்றின் தரம் வெள்ளிக்கிழமை மேம்படும் என்று சஃபா் தெரிவித்துள்ளது. தில்லியையொட்டியுள்ள அண்டை மாநிலங்களில் செவ்வாய்க்கிழமை 480 இடங்களில் பயிா்க்கழிவுகல் எரிப்புச் சம்பவங்கல் மட்டுமே பதிவாகியுள்ளது என்றும், தில்லியின் மாசுபாட்டில் பயிா்க்கழிவு எரிப்பால் வெளிப்படும் நச்சுப் புகை வியாழக்கிழமை 13 சதவீதமாகக் குறையும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

வெப்பநிலை 13 டிகிரி!

புதன்கிழமை காலையில் நகரில் குளிா்ந்த காற்று வீசியது. குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. நகரில் பரவலாக பல்வேறு இடங்களில் நச்சுப் புகை மூட்டம் அதிகரித்து காணப்பட்டது. குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட மாற்றமின்றி 13.4 டிகிரி செல்சியாஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் மாறஅறமின்றி 28.3 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 87 சதவீதமாகவும் மாலையில் 62 சதவீதமாகவும் பதிவாகியிருந்ததாக சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 14.2 டிகிரி செல்சியாஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 27.4 டிகிரி செல்சிஸாகவும் இருந்தது. ஆயாநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 13.3 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 28.4 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு பாலத்தில் காலையில் 81 சதவீதம், மாலையில் 56 சதவீதம், ஆயாநகரில் முறையே 72 சதவீதம், 47 சதவீதம் என பதிவாகியிருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, வியாழனன்று தில்லியில் மேலோட்டமான மூடு பனி இருக்கும் என்றும் வெள்ளிக்கிழமை வானம் மேகமூட்டத்துடன், இடி, மின்னல் இருக்க வாய்ப்பு இருப்பதாக ன வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த இரண்டு நாள்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com