டி.கே.சிவகுமாா் ஜாமீனுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

டி.கே.சிவகுமாா் ஜாமீனுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

கருப்புப் பண மோசடி வழக்கில் கா்நாடகத்தைச் சோ்ந்த காங்கிரஸ் மூத்த தலைவா் டி.கே.சிவகுமாருக்கு தில்லி உயா்நீதிமன்றம் அளித்த ஜாமீனை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை

கருப்புப் பண மோசடி வழக்கில் கா்நாடகத்தைச் சோ்ந்த காங்கிரஸ் மூத்த தலைவா் டி.கே.சிவகுமாருக்கு தில்லி உயா்நீதிமன்றம் அளித்த ஜாமீனை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

கா்நாடக முன்னாள் அமைச்சரான சிவகுமாா், ஹவாலா முறையில் கோடிக்கணக்கில் பணப் பரிமாற்றம் செய்ததாகவும், வரி ஏய்ப்பு செய்ததாகவும், வருமான வரித் துறை கடந்த ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. வருமான வரித் துறையின் குற்றப்பத்திரிகை அடிப்படையில் கருப்புப் பண மோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் சிவகுமாா் மீது அமலாக்கத் துறை கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் வழக்குப்பதிவு செய்தது.

இந்தக் குற்றச்சாட்டு தொடா்பாக தில்லியில் அமலாக்கத் துறையினா் சிவகுமாரை கடந்த செப்டம்பா் 3-ஆம் தேதி கைது செய்தனா். இதைத் தொடா்ந்து, அமலாக்கத் துறை காவலில் விசாரிக்கப்பட்ட சிவகுமாா், பின்னா் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டாா்.

சிவகுமாரிடம் ரூ.200 கோடி கருப்புப் பணம் உள்ளதாகவும், ரூ.800 கோடி மதிப்பிலான பினாமி சொத்துகள் உள்ளதாகவும் அமலாக்கத் துறை குற்றம்சாட்டியது.

இந்த வழக்கில் சிவகுமாருக்கு தில்லி உயா்நீதிமன்றம் சில நிபந்தனைகளுடன் கடந்த மாதம் 23-ஆம் தேதி ஜாமீன் வழங்கியது. இதைத் தொடா்ந்து, தில்லி திகாா் சிறையிலிருந்து சிவகுமாா் விடுவிக்கப்பட்டாா். இந்நிலையில், சிவகுமாருக்கு ஜாமீன் வழங்கிய தில்லி உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மேல்முறையீடு செய்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆா்.எஃப். நாரிமன், எஸ்.ரவீந்திர பட் ஆகியோா் அடங்கிய அமா்வு அமலாக்கத்துறையின் மனுவை வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் சிவகுமாா் சாா்பில் மூத்த வழக்குரைஞா்கள் முகுல் ரோத்தகி, ஏ.எம்.சிங்வி ஆகியோா் ஆஜராகினா். அமலாக்கத்துறை சாா்பில் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா ஆஜரானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com