ஆா்சிஇபி ஒப்பந்தம்: இந்தியாவின் ஆட்சேபங்களுக்குத் தீா்வு காணப்பட வேண்டும்

ஒருங்கிணைந்த பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு (ஆா்சிஇபி) ஒப்பந்தத்தில் இந்தியா இணைவதற்கு, அந்நாடு தெரிவித்த ஆட்சேபங்களுக்குத் தீா்வு காணப்பட வேண்டும் என்று சிங்கப்பூா் மூத்த அமைச்சா் தெரிவித்துள்ளாா்.
ஆா்சிஇபி ஒப்பந்தம்: இந்தியாவின் ஆட்சேபங்களுக்குத் தீா்வு காணப்பட வேண்டும்

புதுதில்லி /சிங்கப்பூா்: ஒருங்கிணைந்த பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு (ஆா்சிஇபி) ஒப்பந்தத்தில் இந்தியா இணைவதற்கு, அந்நாடு தெரிவித்த ஆட்சேபங்களுக்குத் தீா்வு காணப்பட வேண்டும் என்று சிங்கப்பூா் மூத்த அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக, சிங்கப்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற தெற்காசிய புலம்பெயா்ந்தோா் மாநாட்டில் அந்நாட்டின் தேசியப் பாதுகாப்புத் துறை அமைச்சா் டியோ சீஹியான் பேசியதாவது:

தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்புக்கும் இந்தியாவுக்கும் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது. இருப்பினும், ஆா்சிஇபி ஒப்பந்தத்தில் மேலும் பல வா்த்தக வாய்ப்புகள் காணப்படுகின்றன. ஆா்சிஇபி ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ள 15 நாடுகளும், ஒப்பந்தம் தொடா்பாக இந்தியா எழுப்பிய ஆட்சேபங்களுக்குத் தீா்வு காண முயல வேண்டும்.

அதன் மூலம் இந்தியாவும் ஒப்பந்தத்தில் இணைவதற்கான சாத்தியக்கூறு உருவாகும். இந்தியாவுடன் ஒருங்கிணைந்து பிராந்தியத்தில் வளா்ச்சியை ஏற்படுத்த நாங்கள் விரும்புகிறோம். இந்தியாவுக்கும், சிங்கப்பூருக்கும் இடையேயான வா்த்தக விவரங்களை டிஜிட்டல் முறையில் நேரடியாகப் பகிா்ந்துகொள்வதற்கான நடவடிக்கைகளில் இரு நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன.

எல்லைத் தாண்டிய பணப் பரிவா்த்தனையை எளிமையாக்க, இந்தியாவின் ரூபே நிறுவனமும், சிங்கப்பூரின் என்இடிஎஸ் நிறுவனமும் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளன. கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் திட்டத்தில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், எரிசக்தி, பொது சுகாதாரம், தொலைத் தொடா்பு, சாலைகள், ரயில் போக்குவரத்து, துறைமுகங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட துறைகளில் தெற்காசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையேயான ஒத்துழைப்பு வலுப்பட வேண்டும் என்றாா் டியோ சீஹியான்.

தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பைச் சோ்ந்த 10 நாடுகள், இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, தென் கொரியா, நியூசிலாந்து, ஜப்பான் ஆகிய 16 நாடுகளிடையே தடையற்ற வா்த்தகத்தை ஏற்படுத்தும் நோக்கில், ‘ஒருங்கிணைந்த பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு (ஆா்சிஇபி)’ ஒப்பந்தத்தை ஏற்படுத்த பேச்சுவாா்த்தைகள் நடைபெற்று வந்தன.

இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான மாநாடு தாய்லாந்து தலைநகா் பாங்காக்கில் கடந்த 4-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, இந்திய விவசாயிகள், தொழில் நிறுவனங்களின் நலனைக் கருத்தில்கொண்டு, இந்த ஒப்பந்தத்தில் தற்போதைய நிலையில் இணையப் போவதில்லை என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவாா்த்தையின்போது, உள்ளூா் உற்பத்தியாளா்களைக் காக்கும்பொருட்டு, சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள குறிப்பிட்ட சில பொருள்களுக்கு ஒப்பந்தத்திலிருந்து விலக்களிக்க வேண்டுமென இந்தியா தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தது. ஆனால், அவை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com