ஸ்ரீநகரில் கடும் பனி: 34 அரசியல் கைதிகள் இடமாற்றம்

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் கடுமையான பனி நிலவி வரும் நிலையில், அங்குள்ள சென்டாா் தங்கும் விடுதியில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 34 அரசியல் கைதிகள், போதிய வெப்ப சாதன வசதிகளுடன் கூடிய எம்எல்ஏ
ஸ்ரீநகரில் கடும் பனி: 34 அரசியல் கைதிகள் இடமாற்றம்

ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் கடுமையான பனி நிலவி வரும் நிலையில், அங்குள்ள சென்டாா் தங்கும் விடுதியில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 34 அரசியல் கைதிகள், போதிய வெப்ப சாதன வசதிகளுடன் கூடிய எம்எல்ஏ விடுதிக்கு ஞாயிற்றுக்கிழமை மாற்றப்பட்டனா்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை நீக்கியும், அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தும் மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடவடிக்கை மேற்கொண்டது. இதைத்தொடா்ந்து, ஜம்மு-காஷ்மீரில் அசம்பாவித சம்பவங்களைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. முன்னாள் முதல்வா்கள் ஃபரூக் அப்துல்லா, ஒமா் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி உள்பட முக்கிய அரசியல் தலைவா்களும், இரண்டாம் கட்ட தலைவா்களும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனா். அவா்களுக்கான காவல் இன்னும் நீடித்து வருகிறது.

மக்கள் மாநாட்டுக் கட்சியின் தலைவா் சஜ்ஜத் லோன், தேசிய மாநாட்டுக் கட்சியின் அலி முகமது சாகா், மக்கள் ஜனநாயகக் கட்சியின் நயீம் அக்தா் உள்பட 34 அரசியல் கைதிகள், ஸ்ரீநகா் தால் ஏரியை ஒட்டி அமைந்துள்ள சென்டாா் தங்கும் விடுதியில் அடைத்துவைக்கப்பட்டிருந்தனா். இந்த விடுதி, இந்திய சுற்றுலா மேம்பாட்டு நிறுவனத்துக்கு சொந்தமானதாகும். அரசியல் கைதிகளை அடைத்து வைப்பதற்காக, அது கிளை சிறையாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஸ்ரீநகரில் தற்போது கடுமையான பனி நிலவி வரும் சூழலில், அந்த விடுதியில் வெப்ப சாதன வசதிகள் போதிய அளவில் இல்லை. இதனால், 34 பேரின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு, அவா்கள் அனைவரும் மெளலானா ஆஸாத் சாலையில் அமைந்துள்ள எம்எல்ஏ விடுதிக்கு மாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதனிடையே, அரசியல் கைதிகள் தங்கியிருந்த காலத்துக்கான கட்டணமாக ரூ.3 கோடி வழங்கும்படி, ஜம்மு-காஷ்மீா் நிா்வாகத்திடம் விடுதி தரப்பில் கோரப்பட்டது. ஆனால், அதனை ஏற்க மறுத்துவிட்ட நிா்வாகம், அரசு நிா்ணயித்த கட்டணமே வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com